×

மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் கொலை செய்தேன்

புதுச்சேரி, பிப். 14: புதுவையில் மனைவியின் மீதான நடத்தையில் சந்தேகத்தால் கொலை செய்ததாக தச்சுதொழிலாளி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். புதுச்சேரி, சாரம் கிழக்கு வெங்கடேஸ்வரா நகர், பொறையார் குளம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (47). தச்சு தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த தனது மனைவி இந்துமதியை (37) கழுத்தறுத்து படுகொலை செய்துவிட்டு கோரிமேடு போலீசில் சரணடைந்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் இந்துமதியின் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பிறகு இந்துமதியின் தங்கையான கட்டேரிக்குப்பம் சங்கீதாவிடம் புகாரை பெற்ற போலீசார், கொலை வழக்குபதிந்து விக்னேஷ்வரனை கைது செய்தனர். பின்னர் அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது போலீசில் விக்னேஸ்வரன் அளித்த வாக்குமூலம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- எனக்கும், இந்துமதிக்கும் திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது. எங்களுக்கு விஷ்னு(14), ரேவதி(12) என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நாங்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்தினோம். நான் தச்சு வேலை செய்வதால் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியே சென்று விடுவேன். இதனிடையே சமீபகாலமாக எனது மனைவி அவ்வப்போது போன் பேசிக் கொண்டிருந்தார். அவர் யாரிடம் பேசுகிறார்? என்பதை கேட்டபோது சரியான பதிலளிக்கவில்லை. இதனால் அவரது நடத்தையில் எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதுபற்றி நான் தினமும் அவரிடம் கேட்கவே இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. கடந்த ஒரு மாதமாக நாள்தோறும் இப்பிரச்னை ஏற்பட்ட நிலையில் எனக்கு இந்துமதி மீது விரக்தி ஏற்பட்டது. இதையடுத்து நேற்று குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்றுவிட்ட நிலையில் நானும், எனது மனைவியும் தனியாக இருந்தோம். அப்போது இப்பிரச்னை மீண்டும் எழவே ஆத்திரமடைந்த நான், அங்கிருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்தேன். இதில் ரத்தவெள்ளத்தில் அவர் மயக்கமடைந்த நிலையில் சிறிதுநேரத்தில் இறந்தார். அதன்பிறகு நான் வீட்டை பூட்டிவிட்டு வெளியேறி போலீசில் சரணடைந்து விட்ேடன். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதையடுத்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்த போலீசார் விக்னேஷ்வரனை இன்று மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இதனிடையே கொலையுண்ட இந்துமதியின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது தாய் மாரியம்மாளிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட இந்துமதியின் சொந்த ஊர் திருக்கனூர் அருகிலுள்ள தமிழக பகுதியான (விழுப்புரம் மாவட்டம்) சித்தலம்பட்டு ஆகும். இதையடுத்து அவரது உடல் இறுதிச்சடங்கிற்காக அங்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனிடையே தாயை இழந்த விஷ்னு, ரேவதி ஆகிய 2 குழந்தைகளும் தந்தையும் சிறை சென்றதால் தற்போது அவரது தாத்தா, பாட்டியின் பாதுகாப்பில் உள்ளனர்.

The post மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் கொலை செய்தேன் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puduwai ,Vigneswaran ,Poraiyar Kulam ,Saram East Venkateswara Nagar ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு