×

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி கோயம்பேடு பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது: ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அரசு எச்சரிக்கை

சென்னை: கோயம்பேடு சுற்றியுள்ள பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் பயணிகளின் முழு பயன்பாட்டிற்குக் கொண்டு வந்த பின்னர் அதனை எதிர்த்து ஒரு சில ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல மனுக்களை தாக்கல் செய்தனர். மேற்படி வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 9ம் தேதி ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி சென்னை புறவழிச்சாலையில் உள்ள போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி ஆகிய இரு இடங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் பத்தி எண் 16ல் சென்னை மாநகருக்குள் உள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளுக்கு வாகனங்களைக் கொண்டு வருவது குறித்து குறிப்பிட்டுள்ளதை ஒரு சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தவறாகப் புரிந்துகொண்டு அந்தப் பணிமனைகள் அமைந்துள்ள எல்லா இடங்களிலும் பயணிகளை ஏற்றி இறக்கலாம் என தவறான ஒரு கருத்து உருவாக்கத்தை அனைத்து ஊடகங்கள் வாயிலாக பொது மக்களிடையே தவறான செய்திகளை பரப்பி வருவது குறித்து இந்த துறையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு கோயம்பேடை சுற்றியுள்ள பணிமனைகள் அமைந்துள்ள இடங்களில் பொதுமக்களை ஏற்றி இறக்குவதற்கு உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் வழங்கவில்லை. எனவே இதனை தவறான கண்ணோட்டத்துடன், தங்களது லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் ஆம்னி பேருந்துகளின் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது. மேலும் அவ்வாறு செய்வது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாகும் எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளவாறு சென்னை புறவழிச்சாலையில் அமைந்துள்ள போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாக தங்களது பேருந்து பயணச்சீட்டு முன் பதிவு செய்யும் செயலிகளில் குறிப்பிட வேண்டும் எனவும் பிற இடங்களை குறிப்பிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. பொது மக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. எனவே, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் குறிப்பிட்ட இடங்களை தவிர எல்லா பணிமனைகளிலும் பயணிகளை ஏற்றி இறக்குவதை தவிர்க்க வேண்டும். கிளாம்பாக்கம் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வந்த பின்னரே நடைமுறை சிக்கல்கள் குறித்த அறிய இயலும். அப்போது தான் அதற்கு ஏற்றவாறு அரசால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என்பதை பொதுமக்களும், ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

The post சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி கோயம்பேடு பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது: ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Govt ,Omni ,Koyambedu ,Madras High Court ,CHENNAI ,omni bus ,Tamil Nadu Transport Department ,Klambacham ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து