×

போதை வாலிபர் மர்ம சாவு; போலீஸ் மீது கல்வீச்சு: எஸ்ஐ மண்டை உடைந்தது; தடியடி; பதற்றம்

திட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த கூடலூர் கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் என்பவரின் மகன் அன்புராஜ் (20). இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ், பாலமுருகன் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணி அளவில் பெண்ணாடத்தில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஒரே பைக்கில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பெண்ணாடம் காவல் நிலையம் முன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அன்புராஜின் பைக்கை நிறுத்தி விசாரித்தனர். இதில் மூன்று பேரும் குடிபோதை இருந்து உள்ளனர்.

பின்னர், வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் காலையில் வந்து எடுத்து கொள்ளுமாறு கூறி பாலமுருகனின் தாய் சாந்தி, தந்தை தியாகராஜன் ஆகியோரை வரவழைத்து அன்புராஜ், முத்துராஜ், பாலமுருகன் ஆகிய 3 பேரையும் போலீசார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் விருத்தாசலம்-திட்டக்குடி சாலையில் உள்ள பொன்னேரி பஸ் நிறுத்தம் அருகே தலையில் காயத்துடன் மர்மமான முறையில் அன்புராஜ் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெண்ணாடம் போலீசார், அன்புராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று மதியம் அன்புராஜின் உறவினர்கள், சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியும், நள்ளிரவில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறித்து வந்த விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்கியராஜ் மற்றும் திட்டக்குடி டிஎஸ்பி மோகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில், திடீரென இரவு 7 மணி அளவில் வீட்டிலிருந்த அன்புராஜின் உடலை நெடுஞ்சாலைக்கு எடுத்து வந்து சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் கலைந்து செல்லாததால், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது திடீரென நான்கு புறங்களில் இருந்தும் போலீசார் வாகனங்கள் மீது கற்களை வீச தொடங்கினர். இதனால் அங்கிருந்த கும்பல் மற்றும் போலீசார் சிதறி ஓடினர். கற்கள் வீசப்பட்டதில் போலீஸ் வாகனம் முன்பக்கம் சேதம் அடைந்தது. ராமநத்தம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மண்டை உடைந்தது. இதையடுத்து போலீசார் லேசாக தடியடி செய்து அங்கிருந்தவர்களை கலைத்தனர். இதை தொடர்ந்து கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். கூடலூர் பகுதியில் பதற்றம் நிலவுவதால் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கல்வீச்சு தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post போதை வாலிபர் மர்ம சாவு; போலீஸ் மீது கல்வீச்சு: எஸ்ஐ மண்டை உடைந்தது; தடியடி; பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Thitakkudi ,Anburaj ,Pakiyaraj ,Kudalur ,Cuddalore district ,Muthuraj ,Balamurugan ,Dinakaran ,
× RELATED சம்பந்தமில்லாமல் எப்ஐஆரில்...