×

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய முனைய விவகாரம் அமைச்சர் சேகர்பாபு-எடப்பாடி கடும் மோதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலால் அமைதி

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ பேசுகையில், “கேளம்பாக்கத்தில் புது பஸ் நிலையத்தை திறந்தீட்டிங்க. மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க. தென்மாவட்டத்தில் இருந்து அதிகாலையில் சென்னைக்கு வருபவர்களை ஏற்கனவே இருக்கும் பஸ்நிலையத்தில் இறக்கி விட்டால் நன்றாக இருக்கும். மக்கள் சென்னை வந்தால், எளிதாக போகலாம் என்ற இனிப்பான செய்தியை சொல்லி, மக்களிடம் சபாஷ் கேட்கும் அளவுக்கு செய்ய வேண்டும்.

அமைச்சர் சிவசங்கர்: கிளாம்பாக்கத்தை தேர்ந்தெடுத்தது உங்கள் ஆட்சியில் தான். நாங்க ஆரம்பித்த திட்டத்தை பாதியில் நீங்க விட்டு போற மாதிரி இல்லாமல், உங்கள் திட்டத்தை எங்கள் முதல்வர் சிறப்பாக நிறைவேற்றினார். நீங்கள் 30 சதவீதத்தில் விட்டு சென்ற பணிகளை முழுமைப்படுத்தி, கூடுதலாக திட்டங்களை செய்ய உத்தரவிட்டார். அமைச்சர் சேகர்பாபு அதை செய்து கொண்டிருக்கிறார். இதே மாதிரி பாரிமுனையில் இருந்த பஸ் நிலையத்தை கோயம்பேடுக்கு மாற்றும்போது பல்வேறு பிரச்னைகள் உங்கள் ஆட்சியில் வந்தது. ஆனால், கிளாம்பாக்கத்தை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

பயணிகள் யாரும் பிரச்னை எழுப்பவில்லை. அண்ணனை போன்றவர்கள் பிரச்னையாக பேசி கொண்டு இருக்கிறார்கள். கோயம்பேடு பேருந்து நிலையம் இயங்கினால் எதிர்காலத்தில் மக்கள் தொகை அதிகரிக்க, அதிகரிக்க நகரத்திற்குள் சென்று வருவதற்கு பிரச்னை ஏற்படும். அங்கு இயக்கப்பட்ட 100 சதவீத பஸ்களில் 80 சதவீதம் கிளாம்பாக்கத்தில் இருந்தும், வடசென்னை மக்களுக்காக மாதவரத்தில் இருந்து 20 சதவீதம் பஸ்கள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து எந்த பிரச்னையும் இல்லாமல் மக்கள் தென்மாவட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அண்ணன் ஆசைப்பட்டால் அழைத்து செல்கிறோம். கிளாம்பாக்கத்தில் என்னென்ன வசதி இருக்கிறது என்பதை சொல்கிறோம். கூடுதலாக ஏதாவது தேவை என்றாலும் அதை செய்கிறோம்.

அமைச்சர் சேகர்பாபு: கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை பொறுத்தவரை திறப்பதற்கு முன்பாக ஒரு விமர்சனமும், திறந்த பின்பாகவும் ஒரு விமர்சனமும் வந்து கொண்டிருக்கிறது. 2013ல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அன்றைய ஆட்சி அறிவித்தது. 2018ல் டெண்டர் கோரப்பட்டது. 2019ல் பணிகள் தொடங்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி 2021ல் மார்ச்சில் முடிய வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த திட்டத்தை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டியதோடு சரி. அந்த கல்வெட்டையும் நாங்கள் எடுக்கவில்லை. அவர்கள் ஒருமுறை கூட பணிமனைக்கு சென்று ஆய்வு செய்யவில்லை. திமுக ஆட்சியில் 20க்கும் மேற்பட்ட முறை ஆய்வு செய்திருக்கிறோம். கோயம்பேடு பஸ் நிலையம் 32 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

அதிமுக ஆட்சியில் திட்டமிடல் இல்லாத காரணத்தால் பல்வேறு பணிகளை மேற்கொள்ள தவறி விட்டது. அப்படி அவர்கள் தவறவிட்ட பணியை ரூ.100 கோடியில் செயல்படுத்தி காட்டியிருக்கிறோம். கோயம்பேடு பஸ் நிலையம் 2002ம் ஆண்டு திறக்கப்பட்டது. 7 ஆண்டுகள் கழித்து தான் ஆம்னி பஸ்கள் கோயம்பேடு செல்லும் நிலை இருந்தது. ஆனால், திராவிட மாடல் அரசு கடந்த டிசம்பர் 30ம் தேதி பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து இன்று வரை 45 நாட்கள் ஆகிறது. இதற்குள் 2450 பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. கழிவறை, குடிநீர், உணவு வசதி இல்லை என்று பயணிகள் சொல்லவில்லை. எதிர்க்கட்சி சாடலுக்கு என்ன காரணம் என்று நினைத்து பார்த்தேன். ஆசியா கண்டத்திலேயே சிறப்பு வாய்ந்த பேருந்து நிலையம்.

அனைத்து நவீன வசதிகளும் உள்ள பேருந்து நிலையம். சிறு, சிறு பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு. காலப்போக்கில் சரி செய்து விடலாம். ஆனால், தொடர்ந்து புகார் கூறுகிறார்களே என்று பார்க்கும் போது எனது சிந்தைக்கு வருவது, தலைவர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று வைத்ததால் இந்த அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். வேண்டும் என்றால் சட்டமன்றத்தில் உள்ள அனைத்து கட்சியை சார்ந்த எம்எல்ஏக்களும், எதிர்க்கட்சி தலைவர்களையும் அழைத்து செல்கிறோம். கிளாம்பாக்கத்திற்கு செல்வோம். மேலும் என்ன வசதி தேவை என்று சொல்லுங்கள். முதல்வரிடம் கொண்டு சென்று நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது.

எடப்பாடி பழனிசாமி(எதிர்க்கட்சி தலைவர்): நான் விட்ட அறிக்கையை பார்த்தாலே தெரியும். அங்குள்ள சிறு, சிறு பிரச்னையை சரி செய்யுங்கள் என்று தான் சொல்லியிருக்கிறேன். நீங்கள் அவசரத்தில் திறந்து விட்டீர்கள். முழுமையான வசதிகளை பயணிகளுக்கு செய்து கொடுத்து இருந்தால் இந்த பிரச்னை வந்து இருக்காது. நடு ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.

அமைச்சர் சேகர்பாபு: பேருந்து நிலையத்தை அவசரப்பட்டு திறந்து விட்டதாக கூறுகிறார். அவர்கள் செய்ய தவறிய காரியத்தை இந்த அரசு செய்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர், எம்எல்ஏக்கள் வந்தால் பஸ் நிலையத்தை சுற்றி காண்பிக்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி: பயணிகள் சொன்னதை தான் நாங்கள் அறிக்கையாக விட்டோம். கொரோனா காலத்தில் அந்த பணியை குறிப்பிட்ட காலத்தில் நிறைவு செய்ய முடியவில்லை. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, அந்த பணியை செய்து இருக்கிறீர்கள். மக்கள் கேட்பது, முழுமையான பணிகளை முடித்து விட்டு பஸ் நிலையத்தை திறந்திருக்கலாமே என்பது தான்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சித் தலைவர் சொன்னது போல சிறு, சிறு பிரச்னைகள் மட்டுமல்ல, பெரும்பெரும் பிரச்னைகள் எல்லாம் இருந்தது. அதையும் தீர்த்து வைத்துதான் திறந்து வைத்திருக்கிறோம். நேரிடையாக வாருங்கள். அழைத்துச் செல்கிறோம். நீங்கள் சொல்கின்ற குறைகள் இருந்தால், நாங்கள் தீர்த்து வைக்கக் காத்திருக்கிறோம் என்று பெருந்தன்மையாகச் சொல்லியிருக்கிறார். எனவே, இத்துடன் இந்தப் பிரச்னையை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். முதல்வரின் பதிலால் பேரவை அமைதியானது.

* கேளம்பாக்கமா? கிளாம்பாக்கமா?
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது அதிமுக எம்எல்ஏ செல்லூர் கே.ராஜூ, “கிளாம்பாக்கத்தில் தென் மாவட்ட பயணிகள் அவதிக்கு உள்ளாகுவது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர், கிளாம்பாக்கம் என்பதற்கு பதில் கேளம்பாக்கம் என்று பேசினார். இதை கவனித்த அருகில் இருந்த அதிமுக எம்எல்ஏக்கள், “அண்ணே, அது கிளாம்பாக்கம்” என்றனர். இருப்பினும் அதை அவர் கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், செல்லூர் ராஜூ அண்ணே, அது கேளம்பாக்கம் இல்ல, கிளாம்பாக்கம். அண்ணனை (செல்லூர் ராஜூ) பார்த்தாலே எல்லோருக்கும், ஒட்டுமொத்த சபைக்கே மகிழ்ச்சியாக இருக்கும். ஆனந்தமாக சிரிப்பு வரும். உங்கள் மகிழ்ச்சி. எங்கள் மகிழ்ச்சி. அங்கே குழப்பம் இல்லை. உங்களுக்கு தான் குழப்பம் இருக்கிறது. வேண்டுமானால் வாருங்கள், உங்களை அழைத்து செல்கிறேன்” என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலைய முனைய விவகாரம் அமைச்சர் சேகர்பாபு-எடப்பாடி கடும் மோதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலால் அமைதி appeared first on Dinakaran.

Tags : Klambakkam ,Minister ,Shekharbabu- ,Chief Minister ,M.K.Stal ,AIADMK ,MLA ,Sellur Raju ,Kelambakkam ,Chennai ,Klambakkam bus station ,Shekharbabu-Edappadi ,Dinakaran ,
× RELATED கிளாம்பாக்கம் மாநகர பஸ் நிலையத்தில்...