×

திருநின்றவூர் ஐயப்பன் கோயிலில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிர்வாகி: நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார்

திருவள்ளூர்: திருநின்றவூரில் ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் பணம் கையாடல் மற்றும் சட்டவிரோத பணம் பதுக்கல் போன்ற முறைகேட்டில் ஈடுபட்டு வரும் நிர்வாகி மீது நடவடிக்கை கோரி ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் சபாவினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் வச்சலாபுரம்ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் சபாவினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலெக்டர் பிரபு சங்கரிடம் ஒரு புகார் கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் ஒன்றிணைந்து வச்சலாபுரம் முதல் தெருவில் ஸ்ரீ ஐயப்பன் ஆலயம் அமைத்து கடந்த 2005ல் குடமுழுக்கு நடத்தினோம்.

இதைத் தொடர்ந்து அங்கு வசித்து வரும் சுகுமாரனை தலைவராக நியமித்ததோடு, பாஸ்கரன் என்பவரை சேர்த்து ஒரு குழு அமைத்து நிர்வாகம் செய்தனர். இவர்களை கிருஷ்ணமூர்த்தி குருசாமி என்பவர் வழிநடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2021ல் தலைவர் சுகுமாறன் மறைவிற்குப் பிறகு, தன்னை தலைவர் பதவிக்கு நியமனம் செய்யும்படி அனைவரிடமும் பாஸ்கரன் கேட்டுக் கொண்டார். அதன்பேரில் அவரை தலைவராக நியமித்து பொறுப்புகளை ஒப்படைத்தோம்.

இதில் கோயில் உண்டியல் பணம், நன்கொடை பணம் ஆகியவற்றை அவர் தனது சொத்தாக மாற்றினார். அதோடு, அவரது உறவினர்களையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு ஸ்ரீ ஐயப்பா சேவா டிரஸ்ட் என்ற பெயரில் பதிவு செய்து, கோயிலுக்கு நன்கொடையாக உண்டியல் பணம், தங்க நகை, வெள்ளிப்பொருட்கள் மற்றும் பல லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வசூல் செய்தார். அதற்கான கணக்கை அவர் யாரிடமும் காட்டாமல் முறைகேடு செய்துள்ளார். இந்தப்பணம் மூலம் அப்பகுதியில் ரூ.2 கோடிக்கு வீடு கட்டி வருவதோடு, சொந்த ஊரான கேரளாவிலும் அவர் வீடு கட்டி வருகிறார்.

சட்ட விரோத பணத்தை பதுக்கும் இடமாகவும் வீட்டை பயன்படுத்தி வந்துள்ளார். இக்கோயில் பெயரில் நிதி வசூல் செய்து, வங்கியில் ரூ.5 கோடியை தனிநபர் பெயரில் டெபாசிட் செய்துள்ளார். இதுதொடர்பாக திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் செய்தோம். அப்போது, ஊர்மக்கள் முன்னிலையில் காவல் நிலையத்தில் நடத்திய பேச்சுவார்த்தையில் கணக்கு காட்டுவதாக பாஸ்கரன் ஒப்புக்கொண்டார். ஆனால், இதுவரையில் கணக்கு காட்டவில்லை. இதேபோல் வட்டாட்சியர் அலுவலகத்தில் தெரிவித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுத்து கோயில் பணத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

The post திருநின்றவூர் ஐயப்பன் கோயிலில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிர்வாகி: நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : Tiruninnavur ,Ayyappan Temple ,Thiruvallur ,Sri Ayyappa ,Sri Ayyappa temple ,Thiruvallur District ,Thiruninnavur Vachalapuramsree ,Tiruninnavur Iyyappan temple ,
× RELATED திருவள்ளூர் தொகுதிக்கான...