×

வடிவுடையம்மன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா: நாளை கொடியேற்றம்

மாதவரம்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜசுவாமி திருக்கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜசுவாமி திருக்கோயிலில் நாளை இரவு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து 16ம் தேதி காலை சூரியபிரபையில் சந்திரசேகரர் உற்சவம், மாலை 7.30 மணியளவில் சந்திர பிரபையில் சந்திரசேகரர் உற்சவம், இரவு தியாகராஜ சுவாமி மாடவீதி உற்சவம் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 21ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறுகிறது. அதில் 47 அடி உயர மரத்தேரில் சந்திரசேகர சுவாமி திரிபுர சுந்தரி எழுந்தருளி 4 மாட வீதிகளில் உலா வருகின்றனர். தொடர்ந்து 23ம் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கல்யாண சுந்தரர்சுவாமி திருக்கல்யாண உற்சவமும், பிற்பகல் 2 மணியளவில் 63 நாயன்மார்கள் ஊர்வலமாக புறப்பட்டு மாடவீதி உற்சவமும் நடைபெறும்.

தொடர்ந்து இரவு 9 மணியளவில் மகிழடி சேவை உற்சவம் நடைபெறுகிறது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயில் இணை கமிஷனர் ஹரிகரன், உதவி கமிஷனர் சுப்பிரமணியம் மற்றும் ஊழியர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

The post வடிவுடையம்மன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா: நாளை கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Masi month Brahmotsava festival ,Vadudivadamman ,Masi Brahmotsavam ,Tiruvottiyur Vadudayamman Udanura Thiagarajaswamy temple ,Brahmotsavam ,Vadudayamman Udanura Thiagarajaswamy temple ,Thiruvottiyur Sannathi Street ,Chennai ,Masi month Brahmotsava ceremony ,Vadudayamman temple ,
× RELATED திருவொற்றியூர் வடிவுடையம்மன்...