×

ஏடிஎம் இயந்திரத்தில் லட்சக்கணக்கில் ஹவாலா பணம் டெபாசிட் கேரள வாலிபர்கள் கைது: ரூ.10 லட்சம், செல்போன்கள் பறிமுதல்

ஆலந்தூர்: ஆலந்தூர் எம்.கே.என் சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் லட்சக்கணக்கில் ஹவாலா பணத்தை செலுத்தி டெபாசிட் செய்த 2 கேரள வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பரங்கிமலை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட ஆலந்தூர் எம்.கே.என் சாலையில் உள்ள வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் நேற்று முன்தினம், பையில் கட்டுகட்டாக பணத்துடன் 2 வாலிபர்கள் நீண்ட நேரமாக நின்று பணம் செலுத்திக் கொண்டிருந்தனர். ஒரு முறைக்கு ரூ.50 ஆயிரம் என தொடர்ந்து பணம் செலுத்தினர். இதனால் ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த மற்றவர்கள் நீண்ட நேரமாக காத்திருந்தனர். மேலும், இந்த வாலிபர்கள் பையில் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்ததை கண்டு அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு அங்கிருந்த ஒருவர் பரங்கிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அங்கு வந்த போலீசார், அவர்கள் 2 பேரையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ரபி (23), முகமது யாசின் (22) என்பது தெரியவந்தது.

மேலும் சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு நபர் இவர்களுக்கு தினமும் பை நிறைய பணம் கொடுத்து, அதை அவர் சொல்லும் வங்கி ஏடிஎம் மூலம் டெபாசிட் செய்தால் ஒரு நாளைக்கு ரூ.600 சம்பளம் தருவதாக கூறி வேலைக்கு அமர்த்தியதாக தெரிவித்தனர். ஏற்கனவே இதற்கு முன் அசோக் பில்லர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏடிஎம்களில் ரூ.15 லட்சம் செலுத்தி விட்டதாகவும் தொடர்ந்து அதே பகுதிகளிலேயே பணம் செலுத்தினால் சந்தேகம் வரும் என்பதால், பரங்கிமலை பகுதிக்கு வந்து மேலும் ரூ.15 லட்சத்தை ஏடிஎம்-ல் செலுத்த வந்தோம். இதில் ரூ.5 லட்சம் செலுத்தி விட்டோம், மீதமுள்ள ரூ.10 லட்சத்தை டெபாசிட் செய்யும்போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டோம் என தெரிவித்தனர்.
இந்நிலையில் இதேபோல் பல இளைஞர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஏடிஎம்களில் தினமும் பணம் டெபாசிட் செய்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரிடமிருந்தும் ரூ.10 லட்சம் ரொக்கம், 2 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது ஹவாலா பணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஏடிஎம் இயந்திரத்தில் லட்சக்கணக்கில் ஹவாலா பணம் டெபாசிட் கேரள வாலிபர்கள் கைது: ரூ.10 லட்சம், செல்போன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Alandur ,Alandur MKN Road ,Parangimalai police station ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...