×

விவசாயியை கொலை செய்த வழக்கில் தந்தை மகன் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை: கடலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கடலூர்: கடலூர் அருகே விவசாயியை கொலை செய்த வழக்கில், தந்தை மகன் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது. கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே உள்ள எனதிரிமங்கலம் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் மகன் மார்ஷல் டிட்டோ (27) அதே பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் மகன் தேவநாதன். இந்நிலையில் மார்ஷல் டிட்டோவுக்கும், தேவநாதனுக்கும் மாட்டு வண்டி ஓட்டுவதில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேவநாதன் தனது தந்தையான சக்திவேலிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 18.9.2016 அன்று மார்ஷல் டிட்டோவும், கிறிஸ்துராஜும் மாட்டு வண்டியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மண்ணாங்கட்டி மகன் சக்திவேல் (53) சண்முகம் மகன் பாலு மகேந்திரன் (29)  மண்ணாங்கட்டி மகன் சண்முகம் (54) நாராயணன் மகன் ராஜீவ் காந்தி (36) ஆகியோர் அந்த மாட்டு வண்டியை வழிமறித்து அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த தடி, மற்றும் இரும்பு பைப்பால் கிறிஸ்துராஜ் மற்றும் மார்செல் டிட்டோவை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கிறிஸ்துராஜ் புதுப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, சக்திவேல், பாலு மகேந்திரன்,சண்முகம், ராஜீவ் காந்தி, ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது கடலூர் மாவட்ட முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று இந்த வழக்கில் நீதிபதி பிரகாஷ் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில் சக்திவேல், பாலு மகேந்திரன், சண்முகம், ராஜீவ் காந்தி ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கதிர்வேலன் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சண்முகமும், பாலு மகேந்திரனும் தந்தை மகன் ஆவர். அதேபோல சண்முகமும், சக்திவேலும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post விவசாயியை கொலை செய்த வழக்கில் தந்தை மகன் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை: கடலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Cuddalore court ,Cuddalore ,Enathirimangalam Mata Koil Street ,Puduppet, Cuddalore ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை