×

ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் பெட்ரோல் பங்க்கில் கொள்ளை வழக்கில் 8 பேர் கும்பல் கைது

*ரூ.3.50 லட்சம், இரண்டு லாரிகள் பறிமுதல்

திருமலை : ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் பெட்ரோல் பங்க்கில் நடந்த கொள்ளை வழக்கில் மகாராஷ்டிராவை சேர்ந்த 8 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹3.50 லட்சம், 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து பல இடங்களில் பெட்ரோல் பங்க்குகளில் நள்ளிரவில் டீசல் திருடுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அவ்வாறு கடந்த டிசம்பர் மாதம் 20ம் தேதி ராப்தாடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் நள்ளிரவில் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து ரூ.28,000 கொள்ளையடுத்து சென்றனர். அதன் பிறகு கூடூரில் டிசம்பர் 15ம் தேதி பெட்ரோல் பங்க் ஊழியர்களை மிரட்டி ரூ.28,000 கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த ஆண்டு கடந்த 2ம் தேதி ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் உள்ள பட்டலப்பள்ளியில் உள்ள பெட்ரோல் பங்கில் 1924 லிட்டர் டீசல் திருடப்பட்டது. 3ம் தேதி சென்னகோட்டப்பள்ளியில் பெட்ரோல் பங்க்கில் இருந்து 1631 லிட்டர் டீசல் திருடப்பட்டது. 6ம் தேதி அன்று அன்னமய்யா மாவட்டம் குர்ரம்கொண்டா பெட்ரோல் பங்க்கில் 1230 லிட்டர் டீசல் திருடப்பட்டது. தொடர்ந்து இதுபோன்று கர்நாடகாவின் பெங்களூரு, ஜாவர்கி, மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மற்றும் ஒமர்கா பகுதிகளில் டயர் குடோன்களில் புது டயர்கள் கொள்ளை மற்றும் திருட்டுகள் நடந்தன.

இந்நிலையில், பெட்ரோல் பங்க்குகளை குறிவைத்து நடந்த கொள்ளை சம்பவம் குறித்து எஸ்.பி. அன்புராஜன் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து நெடுஞ்சாலைகளில் நடக்கும் கொள்ளை சம்பவங்களை கண்காணிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அனந்தபூர் குற்றப்பிரிபு இன்ஸ்பெக்டர் இஸ்மாயில் தலைமையில் இரவில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

மூன்று மாநிலங்களில் வழிப்பறி, திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் கும்பல் நடமாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் இஸ்மாயில், ஜனார்தன், தனிப்படையினர் ரஞ்சித், பாலகிருஷ்ணா ஆகியோர் அனந்தபூர் எஸ்.கே.பல்கலைக்கழகம் அருகே உள்ள லாரியுடன் இருந்த மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மானாபாத்தை சேர்ந்த ஷிவ் அப்ப பவர் (21), பாலாஜி தத்தாத்ரிநாயக் (40), பாபானந்து ஷிண்டே (21), மாதேவ் சுரேஷ் பவர் (20), அசோக் தர்ம ஜாதேவ் (55) ஆகியோரை மடக்கி பிடித்தனர். மேலும், இந்த கொள்ளை கும்பலிடம் இருந்து திருடிய டீசலை குறைந்த விலைக்கு வாங்க இருந்த அனந்தபூர் மாவட்டம் யாடிகி மண்டலம் வெமலபாடு கிராமத்தை சேர்ந்த கங்கேஸ்வரா (28), நாகேஷ் (41), கடவகல்லு ஜெகதீஷ் (40) ஆகிய எட்டு பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதில் பெரும்பாலானோர் நெருங்கிய உறவினர்கள் ஆவர். கூலி வேலை மற்றும் ஓட்டுநர் தொழிலில் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை என்பதால் எளிதாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையால் முக்கிய நகரின் புறநகரில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் டயர் ஸ்டாக் குடோன்களை குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ஒரு மாதம் அல்லது 20 நாட்கள் உஸ்மானாபாத் பகுதியில் இரண்டு 12 சக்கர லாரிகளை வாடகைக்கு எடுத்து கொண்டு கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் மகாராஷ்டிராவில் கொள்ளை, திருட்டுகளில் ஈடுபடுகின்றனர். இந்த லாரிகளுடன் டீசல் சேகரிக்க 2 கை பம்புகள், டீசல் கேன்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மீட்டர் பைப் பண்டல்கள் கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த கும்பல் நள்ளிரவு 12:30 மணி முதல் அதிகாலை 2 மணிக்குள் பெட்ரோல் பங்க் உள்ள பகுதிக்கு சென்று லாரியை நூறு அல்லது இருநூறு மீட்டர் தூரத்தில் நிறுத்தி விட்டு பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தால் பெட்ரோல் நிலையத்தின் தரைக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ள டீசல் டேங்கின் பூட்டை உடைத்து தாங்கள் கொண்டு வந்த பைப்பை டேங்கில் விட்டு, கை பம்புகள் மூலம் டீசல் எடுத்து கேன்களில் நிரப்பி கொள்கிறார்கள்.

அவ்வாறு ஒவ்வொரு இடத்திலும் 2,000 லிட்டர் வரை கொள்ளையடித்து ஓடிவிடுவார்கள். ஊழியர்கள் கண் விழித்தால் கொலை மிரட்டல் விடுத்து பணத்தை கொள்ளையடித்து செல்வார்கள். திருடப்படும் டீசல் நெடுஞ்சாலையோரம் உள்ள மொத்த வியாபாரிகளுக்கும், தொலைதூர பகுதிகளுக்கு செல்லும் பிற மாநில லாரி டிரைவர்களுக்கும் குறைந்த விலையில் விற்பனை செய்து விடுவார்கள்.அவ்வாறு திருடப்பட்ட டீசலை வாங்கி கொண்டிருந்த யாடிகி பகுதியைச் சேர்ந்தர்வகளுடன் இருந்தபோது போலீசார் இந்த கும்பலை கைது செய்து ரூ.3.50 லட்சம், இரண்டு 12 சக்கர லாரிகள், 2 கை பம்புகள், 100 மீட்டர் பைப், 50 காலி டீசல் கேன்கள் என மொத்தம் ரூ.35 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

The post ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் பெட்ரோல் பங்க்கில் கொள்ளை வழக்கில் 8 பேர் கும்பல் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Karnataka ,Maharashtra ,Tirumala ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள்...