×

விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீச்சு.. புகை மண்டலமாக மாறிய டெல்லி எல்லை… தொடர் பதற்றம் நீடிப்பு!

டெல்லி: டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதால் பரபரப்பு நிலவி வருகிறது. கோதுமை, நெல் உள்ளிட்ட உணவு தானியங்களுக்கான ஆதரவு விலை இருமடங்காக உயர்த்தப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. விவசாயிகள் வருமானத்தை இருமடங்காக உயர்த்தும் வாக்குறுதியையும் ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றாததால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் தொடர்பாக சட்டம் இயற்ற உழவர்கள் கோருகின்றனர்.

விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 2020-21ல் டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பதும் கோரிக்கை விடுத்துள்ளனர். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விளை பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர். வேளாண் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்கவும் ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

கான்கிரீட், இரும்புவேலிகள் அமைத்து முழுவதும் மூடி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒன்றிய அரசு தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனிடையே டெல்லியை நோக்கி பல்வேறு மாநிலங்களில் இருந்து அணி, அணியாக விவசாயிகள் பேரணியாக வந்து கொண்டிருக்கின்றனர். டெல்லி – அம்பாலா எல்லையில் சாம்பு என்ற இடத்தில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்க போலீசார் முயற்சி செய்தனர். நூற்றுக்கணக்கான கண்ணீர் புகைக்குண்டு வீச்சால் டெல்லி எல்லை புகை மண்டலமாக மாறியது.

கண்ணீர் புகைக்குண்டுகளையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முன்னேறுகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. துணை ராணுவத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை அடக்கும் முயற்சிக்கு கண்டனம் எழுந்துள்ளது. எதிரிநாட்டு படையெடுப்பை தடுப்பதுபோல் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க ஒன்றிய அரசு முயற்சி என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

The post விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீச்சு.. புகை மண்டலமாக மாறிய டெல்லி எல்லை… தொடர் பதற்றம் நீடிப்பு! appeared first on Dinakaran.

Tags : Delhi border ,Delhi ,BJP ,Dinakaran ,
× RELATED டெல்லி சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்..!!