×

போளூர் அருகே கூட்டுறவு சங்கத்தில் கொள்ளை முயற்சி லாக்கரை உடைக்க முடியாததால் ₹5.50 கோடி நகைகள், பணம் தப்பியது

*குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் தீவிரம்

ஆரணி : போளூர் அருகே கூட்டுறவு சங்க அலுவலகத்தின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.5.50 கோடி நகைகள் மற்றும் பணம் தப்பியது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த முடையூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு முடையூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். மேலும், இங்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் நகைக்கடன், விவசாயக் கடன், பயிர்க்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 9ம் தேதி மாலை சங்க செயலாளர் வேலுமணி மற்றும் ஊழியர்கள் பணியை முடித்து கொண்டு வழக்கம்போல் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் காலை வந்தபோது சங்க அலுவலகத்தில் உள்ள ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அலுவலகத்தின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்குள்ள லாக்கர்களை மர்ம ஆசாமிகள் உடைக்க முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து, சங்க செயலாளர் வேலுமணி போளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போளூர் டிஎஸ்பி கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில், மர்ம ஆசாமிகள் கூட்டுறவு சங்க அலுவலக கட்டிடத்தின் ஜன்னல் கம்பிகளை வெல்டிங் மெஷின் மூலம் கட் செய்து உள்ளே புகுந்ததும், அங்கிருந்த மின்வயர்களை அறுத்து விட்டும், சிசிடிவி கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி விட்டும், நகைகள் மற்றும் பணம் வைத்துள்ள இரும்பு லாக்கரை வெல்டிங் மெஷின் மூலம் உடைக்க முயற்சி செய்தது தெரியவந்தது.

ஆனால், அந்த லாக்கரை உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சியை கைவிட்டுள்ளனர். இதனால், லாக்கரில் வைத்திருந்த ரூ.5.50 கோடி மதிப்பு நகைகள் மற்றும் பணம் தப்பியது. பின்னர், கொள்ளை முயற்சிக்கு பயன்படுத்திய பொருட்களை அருகே உள்ள விவசாய நிலத்தில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. அந்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையில், எஸ்பி கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். அதன்பேரில், தனிப்படை போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

வடமாநிலத்தவர் கைவரிசையா?

கொள்ளை முயற்சி நடந்த கூட்டுறவு சங்க அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடமாநிலத்தை சேர்ந்த கூர்கா ஒருவர் வாடகை வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்த கொள்ளை முயற்சிக்கு பிறகு அவரை காணவில்லை. அவர் வீட்டின் உரிமையாளருக்கும் தகவல் தெரிவிக்காமல் சென்றுள்ளார். எனவே, அவருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என டிஎஸ்பி கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போளூர் அருகே கூட்டுறவு சங்கத்தில் கொள்ளை முயற்சி லாக்கரை உடைக்க முடியாததால் ₹5.50 கோடி நகைகள், பணம் தப்பியது appeared first on Dinakaran.

Tags : Polur ,Bolur ,Cooperative Society ,Dinakaran ,
× RELATED குழந்தை இல்லாததால் குடும்பத்தில்...