×

மாவட்டத்தில் பூச்சிக்கொல்லிகளை ரசீது வழங்காமல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

*விற்பனையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ரசீது வழங்காமல் விற்பனை செய்தால், பூச்சிக்கொல்லி விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்கள், பருத்தி, கம்பு மற்றும் தோட்டக்கலை பயிர்களான காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்கள் சுமார் 2 லட்சத்து 35 ஆயிரம் எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பயிர் வளர்ச்சி பருவங்களில் தென்படும் பூச்சி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவதில், பூச்சிக்கொல்லிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, பூச்சிக்கொல்லி விற்பனையாளர்கள் தரமான பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்ய வேண்டும் என்பது அனைத்து விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு கூறியதாவது: மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் நோக்கத்துடன், பூச்சிக்கொல்லிகளின் உற்பத்தி, விற்பனை, இறக்குமதி மற்றும் பயன்பாடு ஆகியவற்றை ஒழுங்குப்படுத்துவற்காக, பூச்சிக்கொல்லி சட்டம் 1968 மற்றும் பூச்சிக்கொல்லி விதிகள் 1971ன் படி பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சான கொல்லி விற்பனையாளர்கள் அனைவரும் இச்சட்டங்களுக்கு உட்பட்டு விற்பனை மேற்கொள்ள வேண்டும். பூச்சிக்கொல்லிகளை கடைகளில் விற்பனை செய்வதற்கு உரிமம் பெறுவது அவசியமாகும்.

பூச்சிக்கொல்லிகள் விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்யப்படுவது குற்றமாகும். நகர்புறத்தில் ஒரு பூச்சிக்கொல்லி மருந்துக்கு ரூ.500 என்ற வீதத்தில் அதிகபட்சமாக ரூ.7,500 செலுத்தியும், ஊரகப் பகுதியில் ஒரு பூச்சிக்கொல்லி மருந்துக்கு ரூ.100 என்ற வீதத்தில் அதிகபட்சம் ரூ.1500 செலுத்தியும், உரிமத்தை சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநரிடம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

பூச்சிக்கொல்லி விற்பனையாளர்கள், பூச்சிக்கொல்லிச் சட்டம் 1968ன் படி மற்றும் பூச்சிக்கொல்லி விதிகள் 1971ன் படி இருப்பு பதிவேடுகள், இருப்பில் உள்ள பூச்சிக்கொல்லிகளுக்கு உரிய முதன்மை சான்றுகள், உரிமத்தில் இணைக்கப்பட்டு பராமரிப்பதுடன், பூச்சிக்கொல்லிகளின் இருப்பு விவரம் மற்றும் விலை அடங்கிய தகவல் பலகை, விவசாயிகள் பார்வைக்கு படும்படி வைக்க வேண்டும். விற்பனை செய்யப்படும் பூச்சிக்கொல்லிகளுக்கு உரிய ரசீதுகளில், விவசாயிகளுக்கு கையொப்பம் பெற்று வழங்க வேண்டும். ஆய்வின் போது குறைபாடுகள் கண்டறியப்பட்டால், உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பற்பசை வடிவில் விற்பனை செய்யப்படும் “ரேட்டால்” எனப்படும் 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் கொண்ட எலிக்கொல்லி விஷம், தமிழக அரசால் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை விற்பனையாளர்கள் விற்பனை செய்யக்கூடாது. ஆய்வின் போது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் உரிமம் உள்ள பதிவு செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே, பூச்சிக்கொல்லிகள் வாங்க வேண்டும். கொள்கலன்களில் நன்கு அடைக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளை, லேபிள்களில் உள்ள உற்பத்தி தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும். பூச்சிநோய் கட்டுப்பாட்டிற்கு தேவைப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் அதன் அளவினை பின்பற்ற வேண்டும்.

பயிர்களில் பூச்சி நோய் தாக்குதல் தென்பட்டால், தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி, பரிந்துரைக்கப்பட்டுள்ள பூச்சிக்கொல்லிகள் மூலம் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார். இந்நிலையில், நேற்று கிருஷ்ணகிரியில் உள்ள பூச்சிக்கொல்லி விற்பனை செய்யும் கடைகளில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பச்சையப்பன் தலைமையில், வேளாண் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

The post மாவட்டத்தில் பூச்சிக்கொல்லிகளை ரசீது வழங்காமல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல்...