×

சிதம்பரத்தில் பரபரப்பு அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 102 பேர் வாந்தி மயக்கம்

சிதம்பரம் : அரசு பள்ளி மதிய உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் 102 பேர் வாந்தி மயக்கம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சாக்காங்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் 12.30 மணிக்கு பள்ளியில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மதிய உணவு சாப்பிட்டனர்.

அப்போது, 10ம் வகுப்பு படிக்கும் மாணவி கிஷோனா சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சாப்பாட்டில் அரணை என்ற பல்லி இனத்தை சேர்ந்த ஒன்று வாயில் சிக்கி உள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி சக மாணவர்களிடம், பள்ளி நிர்வாகத்தினரிடமும் கூறியுள்ளார்.

அப்போது அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த மாணவ, மாணவிகள் பலருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த பள்ளி நிர்வாகம் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட பகுதியிலிருந்து 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக மாணவ, மாணவிகளை சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும், கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாணவர்கள் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் செல்லப்பன் மகன் வீரமணி, நகுலன், கணேஷ், கோகுல் பத்தாம் வகுப்பு, சங்கவி எட்டாம் வகுப்பு, சின்னசாமி மகள் சிவரஞ்சினி 8 வகுப்பு, ரவிச்சந்திர மகள் ரித்திகா எட்டாம் வகுப்பு, வைஷ்ணவி ஆறாம் வகுப்பு, வெங்கடேசன் மகன் ரஞ்சித் குமார் ஒன்பதாம் வகுப்பு, கண்ணன் மகள் செளமியா மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிதம்பரம், அரசு காமராஜ் மருத்துவமனையில் 35 பேர், புவனகிரி அரசு மருத்துவமனையில் 28 பேர், அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 40 பேர் என மொத்தம் 102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் உதவி ஆட்சியர் ராஷ்மிராணி, உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, தாசில்தார் ஹேமா ஆனந்தி, நகர இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கடலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இயக்குனர் ஐரன் ரவிக்குமார், மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்து, மாணவர்களுக்கு ஆறுதல் கூறி சிகிச்சை அளிக்கப்பப்பதை பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி அளித்த தகவலின்பேரில் விருத்தாசலம் கல்வி மாவட்ட, கல்வி அலுவலர் துரைபாண்டியன், துணை வட்டாட்சியர் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து சத்துணவு பொறுப்பாளர்கள் செல்வி, கவுதமி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் பெற்றோர்களும், ஊர் பொதுமக்களும் மருத்துவமனை வளாகத்தில் பெருந்திரளாக குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post சிதம்பரத்தில் பரபரப்பு அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 102 பேர் வாந்தி மயக்கம் appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Senshu government school ,Chakangudi ,Keerapalayam Panchayat ,Cuddalore ,
× RELATED மேலைச் சிதம்பரம்