×

மாணவனின் அக்குள் பகுதியில் குத்திய 6 அடி நீள இரும்புக்கம்பி

*சேலம் ஜி. ஹெச்சில் ஆபரேஷன் செய்து அகற்றம்

சேலம் : சேலம் அரசு மருத்துவமனையில் மாணவரின் கை இடுக்கில் சிக்கிய 6அடி இரும்பு கம்பியை மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக எடுத்து அகற்றினர்.
சேலம் செவ்வாய்பேட்டை மூல பிள்ளையார் கோயில் பகுதி, பிள்ளையார் நகரைச் சேர்ந்தவர் ஜகநாதன். இவரது மகன் நிரஞ்சன் (16). தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் மாலை வீட்டின் மாடிப்பகுதியில் நிரஞ்சன் ஷூ எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக தூணில் இருந்த 6 அடி இரும்பு கம்பி நிரஞ்சனின் இடது கை அக்குளில் ஆழமாக குத்தியது. வலியால் அலறித் துடித்த நிரஞ்சனை அவரது பெற்றோர்கள் மீட்டு, குத்திய இரும்புக்கம்பியுடனே சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உடனடியாக மருத்துவ குழுவினர் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்தனர். அதனைதொடர்ந்து பொது அறுவை சிகிச்சை மருத்துவர் சிவக்குமார், உடல்மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் தேன்மொழி, துறைத்தலைவர் ராஜ்அசோக், பேராசிரியர் ராஜசேகர், மருத்துவர் மாதவமனோஜ் தலைமையிலான மருத்துவர்கள் கொண்ட குழுவினர், நிரஞ்சனின் உடலில் குத்திய இரும்பு கம்பியை அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர். இரும்பு கம்பியானது உடலில் 5செமீ அளவுக்கு உள்ளே குத்தி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து 1 மணி நேரத்திற்கும் மேலாக உடலின் உள்ளே குத்தியிருந்த இரும்பின் எஞ்சிய துகள்களை வெற்றிகரமாக எடுத்து அகற்றினர்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டு, தற்போது நிரஞ்சன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதித்த சிறுவனை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக காப்பாற்றிய சேலம் அரசு மருத்துவ குழுவினரை மருத்துவமனையின் டீன் மணி, மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் ஆகியோர் பாராட்டினர்.

The post மாணவனின் அக்குள் பகுதியில் குத்திய 6 அடி நீள இரும்புக்கம்பி appeared first on Dinakaran.

Tags : Salem G. Salem ,Salem Government Hospital ,Salem Chevwaipet Moola Pillaiyar ,Dinakaran ,
× RELATED காளை முட்டிய வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு