×

காரின் அடியில் சிக்கி மாணவன் உடல் கருகி இறந்த சம்பவம் குமரி பெயிண்ட் கடை உரிமையாளர் சிறையில் அடைப்பு

*கொலை நோக்கம் இல்லாத மரணத்தை ஏற்படுத்தியதாக வழக்கு

சுசீந்திரம் : நாகர்கோவில் அருகே காரில் சிக்கிய சிறுவனை சுமார் 3 கி.மீ. தூரம் இழுத்து சென்று உடல் கருகி இறக்க காரணமாக இருந்த பெயிண்ட் கடை உரிமையாளர் மீது, கொலை நோக்கம் இல்லாத, மரணத்தை ஏற்படுத்திய பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.குமரி மாவட்டம் ஈத்தாமொழி அடுத்த தெற்கு பால் கிணற்றான்விளையை சேர்ந்தவர் கோபி (39). தொழிலதிபர். இவர் ஈத்தாமொழி, கன்னியாகுமரியில் பெயின்ட் கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் (ஞாயிறு) விடுமுறை என்பதால் தனது மனைவி லேகா (30) மற்றும் குழந்தைகளுடன், நாகர்கோவில் அருகே உள்ள சங்குத்துறை கடற்கரைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். காரை கோபி ஓட்டினார்.

சங்குதுறை ரோட்டில் செம்பொன்கரை பகுதியில் கார் வந்த போது, அந்த வழியாக தெற்கு சூரங்குடி பள்ளி தெருவை சேர்ந்த அபுபக்கர் சித்திக் மகன் அஜாஸ் அலி (15) என்ற சிறுவன் ஓட்டி சென்ற பைக் மீது மோதியது. இதில் காரின் முன் பகுதியில் பைக்குடன் அஜாஸ் அலி சிக்கி கொண்டான். ஆனால் காரை நிறுத்தாமல் சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு சங்குதுறை பீச் வரை கோபி காரை வேகமாக ஓட்டினார். இதில் பைக் தரையில் உரசி தீ பிடித்தது.

அடியில் சிக்கி இருந்த அஜாஸ் அலி, பைக்குடன் உடல் கருகி உயிரிழந்தான். காரில் இருந்த கோபி காரின் முன் பகுதி தீ பிடித்து புகை வந்த பிறகே காரை நிறுத்தி விட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தப்ப முயன்றார். உடனடியாக பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து, சுசீந்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.பைக் மீது மோதியதும், கோபி காரை நிறுத்தி இருந்தால் அஜாஸ் அலி காயத்துடன் உயிர் தப்பி இருப்பான் என்றும், சுமார் 3 கி.மீ. தூரம் பைக்குடன் சேர்த்து அஜாஸ் அலியையும் இழுத்து சென்றதால், மிகவும் பரிதாபமான முறையில் அஜாஸ் அலி உயிரிழந்தான் என பொதுமக்கள் கூறினர். அஜாஸ் அலியை இழுத்து சென்ற சாலையில் ரத்தமும், சதையுமாக உடல் பாகங்களும் சிதறி கிடந்தன.

இந்த கொடூர விபத்து குறித்து அஜாஸ் அலியின் தாயார் செய்யது அலி பாத்திமா அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோபியை கைது செய்தனர். அவரிடம் நேற்று முன் தினம் இரவு முதல் விசாரணை நடந்தது. விபத்து நடந்ததும் காரை நிறுத்தாமல் சென்றது ஏன்? என்பது குறித்து விசாரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 304(ii) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, கோபியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

இந்த சட்டத்தின் படி மரணம் உண்டாக வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், மரணம் விளைவித்தல் ஆகும். இதில் தண்டனை நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என போலீசார் கூறினர். அஜாஸ் அலி சுண்டபற்றிவிளை பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான்.விபத்தில் பலியான அஜாஸ் அலி, தனது தாயார் செய்யது அலி பாத்திமாவுடன் முதலில் ஆட்ேடாவில் தான் சங்குதுறை பீச் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார்.

ஈத்தாமொழி – மேலகிருஷ்ணன்புதூர் ரோட்டில் செம்பொன்கரையில் உள்ள ஒரு டீ கடையில் அவரது உறவினர் சாகுல் அமீது மற்றும் அவரது மனைவி பீமா ஆகியோர் டீ குடிப்பதற்காக நின்றனர். இதையடுத்து டீ குடிப்பதற்காக அஜாஸ் அலியும், அவரது தாயார் செய்யது அலி பாத்திமாவும் இறங்கினர். டீ குடித்துக் கொண்டு இருக்கும் போது ஆசையில் அஜாஸ் அலி, சாகுல் அமீது பைக்கை சிறிது தூரம் ஓட்டினார். அவர் பைக்கில் சென்ற சிறிது தூரத்தில் கார் வேகமாக மோதி பைக்குடன் சேர்த்து இழுத்து சென்றுள்ளது.

The post காரின் அடியில் சிக்கி மாணவன் உடல் கருகி இறந்த சம்பவம் குமரி பெயிண்ட் கடை உரிமையாளர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Kumari ,shop ,Susindra ,Nagercoil ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...