×

அபுதாபியின் முதல் இந்து கோயில் பிரதமர் மோடி நாளை திறக்கிறார்

அபுதாபி: அபுதாபியின் முதல் இந்து கோயிலை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். ஐக்கிய அரபு எமிரேட்டில் 30 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அங்கு உள்ள அபுதாபியில் புதிய இந்து கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 27 ஏக்கரில் அமைந்துள்ள கோயிலுக்கு 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த கோயில் பாரம்பரிய முறைப்படி கற்களால் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 25,000 கற்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மற்றும் குஜராத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள் கற்களை செதுக்கியுள்ளனர்.

கட்டுமானத்திற்கு பயன்படுத்த பெரும்பாலான சிவப்பு நிற மணல் கற்கள் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். கோயில் உட்புற கட்டுமானத்தில் 40,000 கன அடி பளிங்கு நிற கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த சிற்ப கலைஞர்கள் சிற்பங்களைச் செதுக்கி உள்ளனர். கோயில் முகப்பில் திறமையான கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்டில் 7 அமீரகங்கள் உள்ளதை குறிக்கும் வகையில் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 12 குவி மாடங்கள், 402 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணிலும் ராமாயணம்,மகாபாரத கதைகளின் காட்சிகள் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளன.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கோயிலின் கட்டுமான பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. ஸ்ரீ அக்சர் புருசோத்தம் சுவாமிநாராயண் அறக்கட்டளை ரூ.900 கோடியில் கோயிலை கட்டியுள்ளது. பிரதமர் மோடி துபாய்க்கு இன்றுமுதல் 2 நாள் பயணம் மேற்கொள்கிறார். அவர் நாளை கோயிலை திறந்து வைக்கிறார். ஐக்கிய அரபு எமிரேட்டில் 3 கோயில்கள் உள்ளன. அந்த கோயில்கள் துபாயில் அமைந்துள்ளன. அபுதாபியின் முதலாவது இந்து கோயிலான இது வளைகுடா பிராந்தியத்தில் உள்ள மிக பெரிய கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.

* நினைவு பரிசு
கோயிலுக்கு முதல்முறையாக வரும் பக்தர்களுக்கு நினைவு பரிசாக கற்களை வழங்கப்பட உள்ளது. இதற்காக இந்திய பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் கற்களுக்கு வண்ணம் பூசும் பணியில் கடந்த 3 மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, தித்தி பட்டேல்(12) கூறுகையில்,‘‘கோயில் கட்டுமான பகுதியில் உள்ள கற்களை சேகரித்து அதில் வண்ணம் பூசி உள்ளோம். ஒரு பக்கத்தில் கோயில் படமும், இன்னொரு பக்கத்தில் ஆன்மீக வாசகங்கள் இடம் பெற்றிருக்கும்’’ என்றார். ரேவா கரியா(8) ,‘‘சிறுவர்கள் கைகளால் உருவாக்கப்பட்டுள்ளதால் இதற்கு சிறிய கலைபொக்கிஷம் என பெயரிடப்பட்டுள்ளது’’ என்றார்.

The post அபுதாபியின் முதல் இந்து கோயில் பிரதமர் மோடி நாளை திறக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Modi ,Abu Dhabi ,UAE ,
× RELATED 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது..!!