×

பெருங்குடி மண்டலக்குழு கூட்டம் கவுன்சிலருடன் வாக்குவாதம் செய்த உதவி வருவாய் அலுவலர் வெளியேற்றம்: உரிய பதில் சொல்லாததால் நடவடிக்கை

ஆலந்தூர்: பெருங்குடி மண்டலக்குழு கூட்டத்தில் கவுன்சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உதவி வருவாய் அலுவலர் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டார். சென்னை மாநகராட்சி, பெருங்குடி 14வது மண்டலக்குழு கூட்டம் புழுதிவாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மண்டலக் குழு தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கல்வி நிலைக்குழு தலைவர் விஸ்வநாதன், உதவி கமிஷனர் முருகன், செயற்பொறியாளர் முரளி முன்னிலை வகித்தனர். அவை முன் 36 தீர்மானங்கள் வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதில் 186வது வார்டு கவுன்சிலர் மணிகண்டன் பேசும்போது, ‘‘இந்த மண்டலத்தில் வரிவிதிப்பு முறையாக செயல்படுவதில்லை. மந்தைவெளி பேருந்து நிலையத்தில் ஆரம்ப சுகாதார மையம், சமுதாயக் கூடம் அமைக்கும் கோரிக்கையை அதிகாரிகள் நிராகரிப்பது நியாயமில்லை’’ என்றார்.

189வது வார்டு கவுன்சிலர் பாபு பேசும்போது, ‘‘பள்ளிக்கரணை ஐ.ஐ.டி. காலனி சமூக நலக்கூடத்தில் ஏழை, எளிய மக்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்ய வரைவு காசோலையுடன் சென்றால், அதிகாரிகள் முறையாக பதில் சொல்லாமல் திருப்பி அனுப்பி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்துகின்றனர்’’ என்றார். அப்போது அங்கிருந்த மண்டல உதவி வருவாய் அலுவலர் தீனதயாளன் கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

உடனே, மண்டலக்குழு தலைவர் ரவிச்சந்திரன், மாநகராட்சி கல்வி நிலைக்குழு தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் கவுன்சிலர்கள் கேள்வி கேட்டால் உரிய பதில் சொல்ல வேண்டும். அவை மரபை மீறி அதிகார தோரணையுடன் பேசக்கூடாது என்றனர். ஆனால், உதவி வருவாய் அலுவலரோ மீண்டும் மேஜையை தட்டி சத்தமாக பேசியதால், அவரை மன்றத்தை விட்டு வெளியேறும்படி மண்டலக்குழு தலைவர் உத்தரவிட்டார். அவர் வெளியேறிய பின் கூட்டம் தொடர்ந்தது. பிறகு மண்டலக்குழு தலைவர் ரவிச்சந்திரன் பேசும்போது, ‘மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகளால்தான் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. அவர்கள் செய்யும் தவறுகளை மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக் காட்டினால் கோபப்படுவது நியாயமில்லை’’ என்றார்.

The post பெருங்குடி மண்டலக்குழு கூட்டம் கவுன்சிலருடன் வாக்குவாதம் செய்த உதவி வருவாய் அலுவலர் வெளியேற்றம்: உரிய பதில் சொல்லாததால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Perungudi ,Zonal ,Committee ,Perungudi Zonal Committee ,Chennai Municipal Corporation ,Perungudi 14th ,Zonal Office ,Purudivakam ,Zonal Committee ,SV Ravichandran ,Dinakaran ,
× RELATED சென்னை பெருங்குடியில் லாரி மோதி...