×

சென்னை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு: மேயர் பிரியா வழங்கினார்

சென்னை: சென்னை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை மேயர் பிரியா வழங்கினார். ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு 2023-24ம் கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கான இலக்கியம் சார்ந்த போட்டிகள் பேச்சு, கட்டுரை, பாட்டு மற்றும் தனித்திறன் ஆகிய பிரிவுகளில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் உருது மொழிகளில் தனித்தனியே நடத்தப்பட்டது. விளையாட்டுப் போட்டிகள் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவாகவும், உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு மற்றொரு பிரிவாகவும் நடத்தப்பட்டது.

மேலும், வயது வரம்பு அடிப்படையில் 45 வயதிற்கு கீழ், 45 வயதில் இருந்து 55 வயதிற்குள், 55க்கு மேல் என 3 பிரிவாக ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், பூப்பந்து, கைப்பந்தாட்டம் மற்றும் வளையம் எறிதல் ஆகிய போட்டிகள் தனித்தனியே நடத்தப்பட்டன. உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு 100 மீட்டர் ஓட்டப் பந்தயமும், குண்டு எறிதல் போட்டியும் நடத்தப்பட்டது. இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் 24 பிரிவுகளில் நடத்தப்பட்டதில் வெற்றி பெற்ற 283 ஆசிரியர்களுக்கு மொத்தம் 478 பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மேயர் பிரியா வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது: கல்விக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதை தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியில் மாணவர்களின் கல்விக்கென பல்வேறு சிறப்புத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்கிடும் வகையில் அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கி வருகிற சென்னைப் பள்ளிகளின் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துகின்ற வகையில் சென்னைப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியின்போது, துணை ஆணையர் ஷரண்யா அறி, மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், நிலைக்குழு தலைவர்கள் விசுவநாதன், சாந்தகுமாரி, ராயபுரம் மண்டலக் குழு தலைவர் ராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் மதிவாணன், சுப்பிரமணி, கல்வி அலுவலர் வசந்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post சென்னை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு: மேயர் பிரியா வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mayor Priya ,Teacher's Day ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...