×

மாநகராட்சி 4வது மண்டலக்குழு கூட்டம் ரூ.8.64 கோடியில் திட்டப்பணி: 81 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி 4வது மண்டலக்குழு கூட்டத்தில் ரூ.8.64 கோடியில் திட்டப்பணிகளுக்கு 81 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகராட்சி, 4வது மண்டலக்குழு கூட்டம் தண்டையார்பேட்டை – திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மண்டலக்குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமை தாங்கினார். மண்டல அதிகாரி விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்துகொண்டு வார்டில் உள்ள பிரச்னைகள் குறித்து விவாதித்தனர்.

இதில், 41வது வார்டு கவுன்சிலர் பேசுகையில், ‘‘சென்னை மாநகராட்சியிடம் அனுமதி வாங்காமல் அரசியல் கட்சியினர் தனி நபர் விளம்பர பேனரை பொது இடங்களில் வைக்கிறார்கள். அனுமதி இன்றி வைக்கப்படும் பேனர்களை அகற்ற வேண்டும். இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது’’ என்றர். இதற்கு மண்டல குழுத் தலைவர் பதிலளித்து பேசுகையில், ‘‘அனுமதி இன்றி வைக்கப்படும் பேனர்கள் அகற்றப்படும். தடைகளை மீறி பேனர் வைத்தால் காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் குடிநீர் வாரிய அதிகாரிகள் புதிதாக குடிநீர் இணைப்பை வழங்கும்போது சாலையைத் தோண்டி, குடிநீர் குழாய் இணைப்பு வழங்குகிறார்கள். பிறகு மீண்டும் அந்த சாலை குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், அப்படியே விட்டு விடுகிறார்கள். சாலைகுறித்து முறையாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்’’ என்றார்.

கூட்டத்தில் ரூ.8.64 லட்சம் மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு 81 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முக்கிய தீர்மானமாக காசிமேடு சூரிய நாராயணர் தெருவில் புதிதாக ரூ.15 லட்சம் செலவில் ரேஷன் கடை கட்டுவது, எம்கேபி நகர் மத்திய அவென்யூவில் ரூ.30 லட்சம் செலவில் ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானம் அமைப்பது, வியாசர்பாடி வாசுகி நகரில் ரூ.21 லட்சம் செலவில் பூங்கா மேம்படுத்துதல், சர்மா நகரில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியின் 2வது மாடியில் ரூ.34 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டுவது, வியாசர்பாடியில் ரூ.22 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி கூடத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் 38வது வார்டுக்கு உட்பட்ட பட்டேல் நகரில் சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுபவர்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த ஆண்டு அந்த பள்ளியில் பொதுத் தேர்வு எழுதுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கு மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post மாநகராட்சி 4வது மண்டலக்குழு கூட்டம் ரூ.8.64 கோடியில் திட்டப்பணி: 81 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Municipal 4th Zonal Committee Meeting ,Thandiyarpettai ,4th Zonal Committee Meeting ,Chennai Municipality ,Chennai ,Municipality ,Zonal Office ,Dandiyarpettai ,Thiruvotiyur Highway ,Zonal ,Committee ,Netaji ,Dinakaran ,
× RELATED அறுபடை முருகன் கோயில்களுக்கு இலவச...