×

இன்ஸ்டாகிராமில் ரூ.30.90 லட்சத்தை இழந்ததால் 2 மகளுடன் வங்கி ஊழியர் ரயிலில் பாய்ந்து தற்கொலை: விசாரணையில் திடுக் தகவல்

கும்பகோணம்: இன்ஸ்டாகிராமில் ரூ.30.90 லட்சத்தை இழந்ததால் 2 மகளுடன் வங்கி ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (42). கோயம்புத்தூர் வட மதுரையில் கட்டுமானம் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி (40). தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இவர்களது மகள்கள் ஆருத்ரா 6ம் வகுப்பும், சுபத்ரா 4ம் வகுப்பும் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து தனது மகள்கள் 2 பேருடன் கிளம்பிய ஆர்த்தி, உத்தாணி ரயில்வே கேட்டிற்கு ஸ்கூட்டியில் சென்றுள்ளார். அப்போது, பிற்பகல் 3.30 மணிக்கு செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்முன் 3 பேரும் கட்டி அணைத்தபடி பாய்ந்தனர். இதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார், 3 பேரின் உடல்களையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நேற்று அவர்களது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி போலீசார் தரப்பில் கூறுகையில், ‘தற்கொலை செய்து கொண்ட ஆர்த்தி, கடந்த ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராமில் கிடைத்த லிங்க் மூலம் ஆன்லைன் டிரேடிங் பிசினஸில் ரூ.30.90 லட்சத்தை இழந்துள்ளார். தனது கணவர் உட்பட வீட்டில் யாருக்கும் தெரியாத நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, மருதுபாண்டியர் நகரில் வசிக்கும் அவரது தந்தை கணபதியிடம் பிரச்னையை விவரித்துள்ளார்.

பின்னர் திருவள்ளூர் சைபர் கிரைமில் ஜனவரி 24ம் தேதி ஆர்த்தி புகார் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 10ம் தேதி சனிக்கிழமை காலை தந்தை வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு ஆர்த்தி வந்துள்ளார். இந்த சம்பவத்தால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்ததால் தனது 2 மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது,’ என்றனர்.

The post இன்ஸ்டாகிராமில் ரூ.30.90 லட்சத்தை இழந்ததால் 2 மகளுடன் வங்கி ஊழியர் ரயிலில் பாய்ந்து தற்கொலை: விசாரணையில் திடுக் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Rajesh ,Kumbakonam Ponnusamy ,Thanjavur district ,Coimbatore North Madurai ,Dinakaran ,
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...