×

குடிநீரில் நச்சுவால் தொழிலாளர்கள் வாந்தி, மயக்கம்; தனியார் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனம் மூடல்: கோட்டாட்சியர் உத்தரவு

பள்ளிப்பட்டு: தனியார் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்கனவே தண்ணீர் குடித்த 86 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயங்கி விழுந்ததால் நிறுவனத்தை மூட கோட்டாட்சியர் உத்தரவிட்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே எஸ்.வி.ஜி.புரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் 1600க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு நிறுவனத்தில் குடிநீர் பருகிய தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், 86 பெண் தொழிலாளர்களை திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்நிலையில் சுகாதாரத்துறை சார்பில் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் குடிநீர் பரிசோதனை செய்யப்பட்டதில், குடிநீர் குடிப்பதற்கு உகந்ததல்ல என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அனுமதியின்றி நேற்று முன்தினம் நிறுவனம் திறந்து தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று 10க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து சுருண்டு விழுந்தனர். அவர்களை திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து திருத்தணி கோட்டாட்சியர் தீபா, ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் விஜயகுமார், ஒன்றிய குழுத் தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன், வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆடை நிறுவனத்திற்கு சென்று, குடிநீரில் நச்சு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள அதே நேரத்தில் சுகாதாரமற்ற சூழல் நிலவி வருவதாலும், தொழிலாளர்கள் திடீரென்று மயக்கமடைந்து வருவதால், முழுமையான சோதனைக்கு உட்படுத்தி தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வரை ஆடை ஏற்றுமதி நிறுவனம் மூட கோட்டாட்சியர் உத்தரவிட்டார். சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் நிறுவனத்தில் காற்றோட்டம் இல்லாததால் விஷவாயு காரணமாக தொழிலாளர்கள் உயிருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.

The post குடிநீரில் நச்சுவால் தொழிலாளர்கள் வாந்தி, மயக்கம்; தனியார் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனம் மூடல்: கோட்டாட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : PALLIPATTA ,Kotakshiar ,SVGpuram ,RK Pettai, Thiruvallur district ,Kotatsiyar ,Dinakaran ,
× RELATED லப்பை கண்டிகை கிராமத்தில்...