×

பிட் காயின் டிரேடிங்கில் ரூ.55 லட்சம் நூதன மோசடி: வாலிபர் கைது

ஆவடி: பிட் காயின் டிரேடிங் என்ற பெயரில் ரூ.55.38 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். ஆவடியை அடுத்த அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(47). தனியார் வங்கி ஊழியர். இவர் பேஸ்புக்கில் பார்ட் டைம் ஜாப் என்ற விளம்பரத்தை பார்த்து அதில் கொடுக்கப்பட்ட நம்பருக்கு வாட்ஸ் அப் நம்பர் மற்றும் டெலிகிராமில் தொடர்பு கொண்டு பேசியனர். பின்னர் பிட் காயின் டிரேடிங்க் என்ற பெயரில் பாலமுருகனுக்கு ஒரு யூசர் நேம் அண்ட் பாஸ்வேர்ட் கொடுக்கிறார்கள்.

அந்த கணக்கில் பாலமுருகன் அவர்களுடன் சாட் செய்தபோது அவரை பல வங்கி கணக்குகளில் பணம் போட சொல்கிறார்கள். அந்த பணத்திற்கு அவருக்கு லாபமாக வரும் பணத்தை அவருடைய வங்கி கணக்கில் போட்டு விடுவதாக மோசடி நபர்கள் கூறியதை நம்பி அவரும் சுமார் ரூ.55,38,625/- முதலீடு செய்கிறார். ஆனால் மோசடி நபர்கள் கூறியபடி பாலமுருகனுக்கு பணத்தை திரும்ப தராத காரணத்தால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 1930 கட்டுப்பாட்டு அறைக்கு மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆவடி இணைய வழிக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்த நிலையில், பாலமுருகன் பணத்தை அனுப்பிய வங்கி கணக்குகள் பற்றிய விபரங்களை எடுத்து பார்த்ததில் ஊரப்பாக்கத்தை சேர்ந்த டோமினிக்(27) என்பவர் அவருடைய ஐசிஐசிஐ வங்கி கணக்குகளை பயன்படுத்தியது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரணை செய்ததில் டெல்லியில் உள்ள மோசடி நபர்களுக்கு உதவும் வகையில், அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி டோமினிக் மற்றும் டெல்லியை சேர்ந்த நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்நிலையில், டோமினிக்கை நேற்று கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் டெல்லியில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரை தமிழ்நாட்டில் இவர்களிடம் ஏழு நபர்கள் ஏமாந்து இருப்பது தெரியவந்தது. மேலும் இந்தியா முழுவதும் எத்தனை நபர்கள் என்பது பின்னர் விசாரணை தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பிட் காயின் டிரேடிங்கில் ரூ.55 லட்சம் நூதன மோசடி: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Avadi ,Balamurugan ,Ampathur ,Facebook ,
× RELATED ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட...