×

நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களால் தொல்லை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவள்ளூர்: மாவட்ட தலைநகரான திருவள்ளூர் நகராட்சியில் கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்பட அனைத்து துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. திருவள்ளூரில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, தி. நகர் மந்தவெளி, பூந்தமல்லி, ஆவடி, திருத்தணி, திருப்பதி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகள் வழியாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. பள்ளிக்கு செல்பவர்களும் பேருந்திலிருந்து இறங்கி சாலைகளில் நடந்து செல்வதுண்டு. திருவள்ளூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சிறு வியாபாரிகள் திருவள்ளூருக்கு வந்து பொருட்களை வாங்கி செல்வதுண்டு.

இந்நிலையில் சாலையில் நகரின் முக்கிய சாலைகளில் நாய்கள் கட்டுப்பாடின்றி கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இதனால் பலத்த காயங்கள் ஏற்படுகின்றன. சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. பொதுவாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள், குதிரைகள், நாய்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே பலமுறை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும் இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இருப்பினும் மாவட்ட தலைநகரில் ஆயிரக்கணக்கான பொது மக்கள், மாணவர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், பெண்கள் வந்து செல்லக்கூடிய இந்த சாலைகளில் நாய்கள் சுற்றித் திரிவதாலும், நாய்கள் துரத்திச் சென்று கடிப்பதாலும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் அந்த நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக் கொண்டு சாலையில் திடீரென ஓடுவதால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது மோதி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும், பேரூராட்சி நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களால் தொல்லை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Tiruvallur Municipality ,Collector's Office ,District Police Superintendent's Office ,Government Medical College Hospital District Integrated Court Complex ,Dinakaran ,
× RELATED 100% வாக்களிக்க கோரி மகளிர் பங்கேற்ற...