×

குடியுரிமை திருத்த சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்: ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு உறுதி

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று பேரவையில் ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. ஆளுநர் உரையை சட்டப்பேரவையில் நேற்று சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது: சங்ககாலத் தமிழர் கடைபிடித்த உலக உடன்பிறப்பு நேயத்தை எடுத்துரைக்கும் அந்த மகத்தான வரிகள் தான் இந்த அரசை வழிநடத்திச் செல்கின்றன. வேற்றுமையில் ஒற்றுமை என்ற நமது நாட்டின் உன்னதமான கொள்கைகள் தற்போது கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தைப் பேணி பாதுகாப்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது.

சிறுபான்மையினர் மற்றும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களுடன் என்றும் நாம் துணை நிற்போம். அந்த வகையில் ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த அனுமதிப்பதில்லை என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

* அமைதியான மாநிலம்
சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு மாநில அரசு முன்னுரிமை வழங்குவதினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களால் தமிழ்நாடு அமைதியான மாநிலமாக கருதப்படுகிறது. இது அண்மையில் நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களைத் தடுப்பதில் இந்த அரசு சமரசமற்ற அணுகுமுறையைக் கடைபிடித்து வருகிறது. ேமலும், சமுதாயக் கண்காணிப்பு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்காணிப்பு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தல், சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

* இந்தியாவுக்கே வழிகாட்டி
திமுக அரசு பதவியேற்றது முதல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மட்டுமன்றி, அவர்களின் எதிர்பார்ப்புகளையும் தாண்டி அவர்களது தேவைகளையும் நிறைவு செய்துள்ளோம். இந்தக் குறுகிய காலத்தில் நாங்கள் நிறைவேற்றிய சாதனைகள் மற்றும் நாங்கள் ஒன்றாக அடைந்த முன்னேற்றம் குறித்து இன்று இந்த மக்கள் மன்றத்தின் முன் பெருமிதத்தோடு நிற்கிறோம்.

தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் செழுமைக்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதோடு, மகத்தான தமிழ்க் கனவை நனவாக்க உறுதியாக உள்ளோம். இந்த அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு. சமூகநீதி, மத நல்லிணக்கம், பகுத்தறிவுச் சிந்தனை மற்றும் மக்களாட்சியின் மாண்புகள் போன்றவற்றிற்கு நாட்டிற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு தொடர்ந்து திகழும் வகையில் இந்த நம்பிக்கை வரும்காலங்களிலும் நிலைக்கும்.

* விடியல் பயணத்திட்டம்
சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த விடியல் பயணத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் இந்த அரசு, நமது நாட்டிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது. இதன் விளைவாக பேருந்துப் பயணங்களில் பெண்களின் பங்கு 40 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்ந்து, பெண்கள் எளிதாகப் பயணம் செய்யவும், முன்னேறிடவும் வழி
பிறந்துள்ளது.

* பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டது
நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும், மக்கள் தொகையில் 6 சதவீதத்தையும் மட்டுமே கொண்டுள்ள நமது மாநிலம், இந்தியாவின் பொருளாதாரத்தில் 9 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை அளிக்கிறது. 2022-23ல் 7.24 சதவீத நிலையான தேசிய வளர்ச்சி வீதத்தை விஞ்சி, நமது மாநிலத்தின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே வேளை சராசரி பணவீக்கத்தை பொறுத்தவரை 2022-23ல் நாட்டின் 6.65 சதவீத பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.97 சதவீதமாக உள்ளது. நாட்டை விட தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியடைவதோடு, அதே காலகட்டத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதிலும் நமது மாநிலம் திறம்பட செயல்பட்டு வருவதை இது மெய்ப்பிக்கிறது.

* முதியோர் ஓய்வூதியம்
குறைந்த வருவாய் ஈட்டுவோர், தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இயலாத நபர்கள், குறிப்பாக முதியோர்கள், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் போன்றவர்களின் நலன்காக்க, அரசு பல்வேறு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மாத ஓய்வூதியம் 2023ல் ரூ.1000லிருந்து ரூ.1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.845 கோடி கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. மேலும் நிலுவையில் இருந்த அனைத்து விண்ணப்பங்களுக்கும் தீர்வு காணப்பட்டதன் பயனாக 74,073 தகுதியுடைய பயனாளிகள் புதிதாக சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

* 1.71 லட்சம் மாணவர்கள் பயன்
ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்குப் பெருமளவில் உதவிடும் வகையில், விடுதிகளில் மாதாந்திர உணவுக் கட்டணத்தை பள்ளி மாணவர்களுக்கு 1000 ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும் கல்லூரி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும் அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் 1.71 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

* மருத்துவ சுற்றுலாவில் முதலிடம்
தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் சட்டவிரோத கடத்தலைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு வனம் மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது நமது மாநிலத்தின் வனவியல் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு புதிய மைல்கல். மீண்டும் மஞ்சப்பை, தமிழ்நாடு பசுமை கால நிலை நிறுவனம் மற்றும் சுற்றுச்சூழல் வீராங்கனைகள் ஆகிய நமது 3 முயற்சிகளும் ஒன்றிய சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனவிலங்கு அமைச்சகத்தால் சிறப்பான நடைமுறைகளாக அங்கீகரிக்கப்பட்டு, அண்மையில் துபாயில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டு உலகளவிலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

மருத்துவ சுற்றுலாவில் நாட்டிலேயே முதன்மையான இடமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதற்காக மருத்துவ கட்டமைப்பின் தரத்தை மேலும் மேம்படுத்துவதில் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, 15 மாதத்திற்குள்ளாகவே கிண்டியில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை ரூ. 240 கோடி செலவில் அரசு கட்டமைத்து செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.

The post குடியுரிமை திருத்த சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்: ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு உறுதி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Tamil Nadu government ,Speaker ,Appavu ,Assembly ,Tamils ,Sangha ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...