×

தாது மணல் கொள்ளை, கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒட்டுமொத்தமாக விசாரணை: தலைமை நீதிபதி அமர்வு தகவல்

சென்னை: தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் இறுதி விசாரணையை தொடங்கியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் சட்டவிரோத கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒட்டுமொத்தமாக விசாரிப்பதாக அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட கடலோரப் பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பாக கடந்த 2015ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தமிழக தொழில்துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தாதுமணல் எடுப்பதற்காக 7 நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து தாது மணல் எடுப்பதற்கு 2013ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 5 ஆயிரத்து 832 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பை, தனியார் தாதுமணல் ஏற்றுமதியாளர்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் வசம் உள்ள ஒரு கோடியே 55 லட்சம் டன் தாது மணலை பறிமுதல் செய்து ஒன்றிய அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மீண்டும் ஆய்வு செய்ததில், 2018 முதல் 2022 வரை சுமார் 16 லட்சம் டன் தாது மணல் சட்ட விரோதமாக கடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், சுமார் 6,449 டன் அளவிலான மோனோசைட் என்ற கனிமங்களும் கடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.தற்போது 24 மணி நேரம் காவல்துறை கண்காணிப்பில் தாது மணல் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார், தாதுமணல் முறைகேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டார். அப்போது, நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சுரேஷ் ஆஜராகி, அரசு ஆவணங்கள் அடிப்படையில், 2 ஆண்டுகளாக தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இதுவரை மூன்று விரிவான அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைகள் ஒன்றிய, மாநில அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்றார். இதையடுத்து நீதிபதிகள், விசாரணையை மார்ச் 11க்கு தள்ளிவைத்ததுடன் தாது மணல் எடுக்க விதிக்கப்பட்ட தடை மற்றும் விசாரணை அறிக்கைகள், சட்டவிரோத கடத்தல் என அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

The post தாது மணல் கொள்ளை, கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒட்டுமொத்தமாக விசாரணை: தலைமை நீதிபதி அமர்வு தகவல் appeared first on Dinakaran.

Tags : Justice ,CHENNAI ,Madras High Court ,Kanyakumari ,Thoothukudi ,Tirunelveli ,Dinakaran ,
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு