×

தாடிக்கொம்பு பேரூராட்சி ஆத்துப்பட்டி கிராம மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கையான குடகனாறு பாலம்

*ரூ.7.28 கோடியில் கட்டுமான பணிகள்

*கிராம மக்கள் பாராட்டு

திண்டுக்கல் : தாடிக்கொம்பு பேரூராட்சியில உள்ள ஆத்துப்பட்டி கிராம மக்கள் குடகனாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று 40 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது ரூ.7.28 கோடி மதிப்பில் மேம்பால கட்டுமான பணிகளுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். இதனால் தமிழ்நாடு அரசுக்கும், அமைச்சருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் ஒன்றியம் தாடிக்கொம்பு பேரூராட்சியில் அமைந்துள்ளது ஆத்துப்பட்டி கிராமம். இங்கு வசிக்கும் மக்களின் 40 வருட கோரிக்கையை நிறைவேற்றி ரூ.7.28 கோடி மதிப்பில் குடகனாற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுத்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமிக்கு கிராம மக்கள் மனதார பாராட்டு தெரிவித்ததோடு பாலம் கட்ட நிதியுதவி வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கிராம மக்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் ஒன்றியம் தாடிக்கொம்பு மற்றும் அகரம் பேரூராட்சிகள் கடந்த 2016ம் ஆண்டு ஆத்தூர் சட்டமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டன. பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது அப்பகுதிக்கு வந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம், பருவமழை மற்றும் புயல் மழை காலங்களில் குடகனாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும்போது தங்கள் கிராமத்திற்கு செல்லமுடியாமல் தவிப்பதாக ஆத்துப்பட்டி மக்கள் கூறினர். இதனால், ஆத்துப்பட்டியை சேர்ந்த மாணவர்கள் மழை காலங்களில் பள்ளிக்கு செல்லமுடியாத நிலை இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த பிரச்னை குறித்து அப்போதைய எம்எல்ஏவான அமைச்சர் ஐ.பெரியசாமி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுசென்றார். ஆனால் திமுக எம்எல்ஏவின் தொகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதில் கடந்த அதிமுக அரசு ஆர்வமின்றி இருந்தது. இதையடுத்து கடந்த சட்டமன்ற தேர்தலின் முடிவில் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்தது. அப்போது அமைச்சராக பொறுப்பேற்ற ஐ.பெரியசாமி 2021ம் வருடம் செப்டம்பர் மாதம் 19ம் தேதி, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆத்துப்பட்டி கிராமத்தை பார்வையிட்டு பொதுமக்களின் கோரிக்கையான குடகனாறு மேம்பாலம் கட்டப்படும் என உறுதியளித்தார்.

பின்னர் இந்த பிரச்னை குறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றார். இதன் எதிரொலியாக குடகனாற்றின் குறுக்கே ரூ.7.28 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்க முடிவானது. இதற்கான பூமிபூஜை இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மனோரஞ்சிதம், திண்டுக்கல் வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தனர். தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதா சின்னத்தம்பி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பூமிபூஜையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்ற கருத்தை நமக்கு வழங்கிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் வந்த திராவிட மாடல் ஆட்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குக்கிராமங்களும் மேம்பட்டு வருகிறது.

இந்த அரசு மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்குவதில்லை. 50 பேர் வசித்தாலும், 10000 பேர் வசித்தாலும் அவர்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் முதலிடம் வகிக்கிறது. இந்த கிராமத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வேலைகள் விரைந்து முடிக்கப்பட்டு விரைவில் பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும்’’ என்றார்.

அளவிட முடியாத சந்தோஷம்…

இந்த பாலம் குறித்து ஆத்துப்பட்டி கிராம மக்கள் கூறும்போது, ‘‘40 வருடங்களாக மழை வந்துவிட்டால் எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாது. நாங்கள் ரேஷன் பொருட்களை வாங்க செல்ல முடியாது.

ஆனால் அமைச்சர் ஐ.பெரியசாமி ஓராண்டிற்குள் பாலம் கட்டுவதற்கான நிதியை பெற்றுக்கொடுத்து அதற்கான பணிகளையும் துவக்கி வைத்துள்ளார். இது எங்களுக்கு அளவிட முடியாத சந்தோஷமாக உள்ளது. இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம். மேலும் எங்களின் தேவைகளை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு என்றும் ஆதரவளிப்போம்’’ என்றனர்.

The post தாடிக்கொம்பு பேரூராட்சி ஆத்துப்பட்டி கிராம மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கையான குடகனாறு பாலம் appeared first on Dinakaran.

Tags : Kudakanar Bridge ,Athupatti, Dadikkombu Municipality ,Dindigul ,Athupatti ,Dadikkombu municipality ,Kudaganar ,Kudakanaru Bridge ,
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...