×

தஞ்சாவூரில் வாழை இலை விலை திடீர் உயர்வு

*பாலித்தீன் பயன்பாட்டை தவிர்க்க விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர் : தஞ்சாவூரில் வாழை இலை விலை திடீரென உயர்ந்துள்ளது. இன்னும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக தென்னையும், வாழையும் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. திருவையாறு. திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை பகுதிகளில் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் வாழை இலை மற்றும் வாழைநார் பொருட்கள் தயாரிப்பின் மூலம் ஏராளமானோர் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

விருந்து, விழாக்கள், திருமணம், சுப நிகழ்வுகளில் வாழை இலையில் உணவு பரிமாறப்படுகிறது. இது மரியாதையின் வெளிப்பாடாகவும், சுகாதாரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. இன்றும் அனேக ஓட்டல்களில் வாழை இலையில் உணவு பரிமாறப்படுகிறது. இலையில் வைத்து கட்டி தரப்படும் உணவுகளுக்கு மவுசு அதிகம்.நாம் வளர்க்கும் ஆடு, மாடு உள்பட கால்நடைகள் வாழை இலையை உணவாக உண்டு பசியாறும். எஞ்சியவற்றை பூமி எளிதாக மக்கச் செய்துவிடும்.

கால மாற்றத்தால் வாழை இலைகள் பயன்பாடு குறைந்து பிளாஸ்டிக் தட்டு, பேப்பர் இலை போன்றவற்றின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் பிளாஸ்டிக் தட்டுகளின் தீமையை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். அத னால் வாழை இலை மற்றும் வாழை மட்டையால் செய்யப்படும் தட்டுகள், கிண்ணங்களின் பயன்பாடு பெருகி வருகிறது. இவை சுற்றுச்சூழலுக்கும் நன்மைபயக்கிறது. தஞ்சையை சுற்றியுள்ள திருவையாறு, அம்மன்பேட்டை, திருக்காட்டுப்பள்ளி, மேலத்திருப்பூந்துருத்தி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழை இலைகள் சென்னையில் உள்ள ஓட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இப்படி அனுப்பி வைக்கப்படும் இலைகளில் 2 வகைகள் உள்ளன. நுனி இலை, ஏடு என 2 வகைகளாக ஓட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுதவிர தஞ்சாவூர் பகுதிகளில் உள்ள ஓட்டல்களுக்கு அனுப்பப்படுவதுடன் காமராஜர் மார்க்கெட்டிற்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. தஞ்சாவூர் காமராஜர் மார்க்கெட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நுனி இலை ரூ.3க்கும், ஏடு இலை ரூ.2க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது தை மாத முகூர்த்த நாட்கள் தொடர்ந்து வருவதால் இலைகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளதால் வாழை இலை விலை உயர்ந்துள்ளது.

தஞ்சை மாநகரில் நுனி இலை ரூ.5க்கும், ஏடு இலை ரூ.4-க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது. திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் ரூ.3க்கு விற்பனையான நுனி இலை தற்போது ரூ.4 முதல் ரூ.5 வரையும், ரூ.2க்கு விற்பனையான ஏடு இலை ரூ.3க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், முகூர்த்த நாட்கள் அல்லது ஏதாவது விஷேச நாட்கள் என்றால் மட்டுமே வாழை இலை விலை உயருகிறது. மற்ற நாட்களில் மிக குறைந்த விலையில் தான் வாழை இலை விற்பனை செய்யப்படுகிறது. திடீரென நுனிஇலை ரூ.2 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை இன்னும் உயரும். ஏனென்றால் தை மாத முகூர்த்தநாட்கள் வர இருப்பதால் விலை குறைய வாய்ப்பு இல்லை என்றனர்.

வாழை விவசாயிகள் கூறும்போது, வாழை இலை முகூர்த்த நாட்களில் மட்டுமே நன்றாக விற்பனையாகிறது. ஓட்டல்கள், சாலையோர கடைகளில் பாலிதீன் பயன்பாட்டை முற்றிலும் தடுத்தால் தான் வாழை இலையின் பயன்பாடு அதிகரிக்கும். அப்படி வாழை இலை பயன்பாடு அதிகரிக்கும்போது விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். இந்த ஆண்டு போதிய அளவு மழை இல்லாத காரணத்தினால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. ஏற்கனவே உர விலை உயர்வு, கூலி உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறையால் நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே பாலிதீன் பயன்பாட்டை முற்றிலும் அதிகாரிகள் தடுத்தால் வாழை இலை பயன்பாடு அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

The post தஞ்சாவூரில் வாழை இலை விலை திடீர் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur district ,Tamil Nadu ,Thiruvaiyar ,Thirukkatupalli ,
× RELATED கலெக்டர் அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் துவக்கம்