×

ஆளுநர் சட்டப்பேரவைக்குள் நுழையும்போதே தேசிய கீதம் இசைத்துதான் வரவேற்றோம் : சபாநாயகர் அப்பாவு விளக்கம்

சென்னை : ஆளுநர் சட்டப்பேரவைக்குள் நுழையும்போதே தேசிய கீதம் இசைத்துதான் வரவேற்றோம் என்று சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். அவையில் சில நிமிடங்கள் பேசிய அவர், “சட்டப்பேரவையின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாகும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்.வாழ்க தமிழ்நாடு.. வெல்க பாரதம்.. நன்றி,” இவ்வாறு தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் உரையைப் படிக்காமல் புறக்கணித்திருந்தாலும் தொடர்ந்து ஆளுநர் அவையிலேயே அமர்ந்திருந்தார். அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

இந்த நிலையில் ஆளுநரின் தேசிய கீதம் குறித்த இந்த கருத்துக்கு விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, ” அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இருந்தவை தவிர ஆளுநரின் சொந்த கருத்துக்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. ஆளுநரை வரவேற்று அழைத்து வரும் போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆளுநர் சட்டப்பேரவைக்குள் நுழையும்போதே தேசிய கீதம் இசைத்துதான் வரவேற்றோம். தமிழ்நாட்டில் எந்த நிகழ்ச்சி என்றாலும் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் வாசிக்கப்படுவது மரபு. பேரவை விதிகளின்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, அடுத்து ஆளுநர் உரை, இறுதியில் தான் தேசிய கீதம். சட்டமன்ற மாண்பை ஆளுநர் மதிக்கவில்லை. மரபை ஆளுநர் மீறியுள்ளார்.பல்வேறு மாநிலங்களில் ஆளுநரை அழைப்பதில்லை, ஆனால் தமிழ்நாடு அரசு ஆளுநரை மதித்து அழைத்து வருகிறது. தேசிய கீதம் இசைப்பது குறித்து கடந்தாண்டே எனக்கு ஆளுநர் கடிதம் எழுதி, அந்தப் பிரச்சினை ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டது,”இவ்வாறு தெரிவித்தார். பின்னர், சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு கூட்டத்தொடரின் முதல்நாள் நிறைவு பெற்றது.

The post ஆளுநர் சட்டப்பேரவைக்குள் நுழையும்போதே தேசிய கீதம் இசைத்துதான் வரவேற்றோம் : சபாநாயகர் அப்பாவு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Speaker ,Assembly ,Governor ,R. N. Ravi ,
× RELATED தபால் வாக்கு செலுத்த தவறியவர் இன்று வாக்களிக்கலாம்