×

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு வனப்பகுதியில் தீ விபத்துகளை தடுக்க வனத்துறை நடவடிக்கை

*மலைகிராம மக்களிடம் விழிப்புணர்வு

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ விபத்துகளை தடுப்பது குறித்து, மலைகிராம மற்றும் வனக்கிராம மக்களிடம் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டத்தில், 1700 சதுர கிலோ மீட்டர் வனக்காப்பு காடுகள் உள்ளது. இம்மாவட்ட காடுகள் கர்நாடகம், தமிழகம் ஆகியவற்றின் எல்லைகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் காடுகள் காவிரி, தென்பெண்ணை ஆறு, சனத்குமார நதி, வாணியாறு, கம்பைநல்லூர் ஆறுகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளன. தர்மபுரி மாவட்ட வனங்கள் பெரும்பான்மை இலையுதிர் காடுகளாகவே உள்ளன.

ஓரிரு இடங்களில் வறண்ட பசுமை மாறாக் காடுகளும் காணப்படுகின்றன. காவிரி ஆற்றங்கரையையொட்டி ஆற்றோர காடுகள் அமைந்துள்ளன. தர்மபுரி காடுகளில் தேக்கு, சந்தனம், வேம்பு, அசோகு, புளிய மரம், துரிஞ்சை, ஆல், வேலம், நீலகிரி, எட்டி மரம், நாகமரம், அரசு, வில்வம், மூங்கில், கருங்காலி, புங்கம் ஆகிய மரங்களும் வேளிக்காத்தான், வெடத்தாரை, துளசி, மருதாணி, ஆவாரம், நொச்சி, நச்சட்டன் காரை ஆகிய செடிவகைகளும், காட்டுவள்ளிக் கொடி, கட்டுக்கொடி, சுரட்டைக் கொடி, ஊணாங்கொடி ஆகிய கொடிவகைகளும் காணப்படுகின்றன.
நடப்பாண்டு பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே, வெயிலின் தாக்கம் தொடங்கி விட்டது. கடந்த 8ம்தேதி 94.4 டிகிரி பாரன்ஹீட்டும், 9ம்தேதி 94.1 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது. இதனால், கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே, மரங்களில் இலைகள் காய்ந்து உதிர்ந்து வருகிறது. சில இடங்களில் மரங்கள் மொட்டையாக காட்சியளிக்கின்றன.

இதனையடுத்து, வனப்பகுதியில் தீ விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க, வனத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வனப்பகுதியை ஒட்டிய வனக்கிராமங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை உள்ளன. மலை கிராமங்களிலும், வனக்கிராமங்களில் வனத்துறையினர் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தி தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தர்மபுரி வனச்சரகத்தில் வத்தல்மலையில் பெரியூர், பால்சிலம்பு, சின்னாங்காடு, குள்ளியனூர், நாயக்கனூர், அரங்கனூர் உள்ளிட்ட 14க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் வனச்சரகர் அருண்பிரசாத் தலைமையில் வனத்துறையினர் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காய்ந்த சருகுகளை அப்புறப்படுத்துதல், ரோந்து செல்லுதல் போன்ற பணிகளும் மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட தர்மபுரி சரகம் ஏலகிரி காப்புக்காடு, பென்னாகரம் சரகம் பதனவாடி காப்புக்காடு, பாலக்கோடு சரகம் திருமால்வாடி, ஒகேனக்கல் சரகம் குத்திராயன் காப்புக்காடு வனப்பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்க ஆய்வு பணிகள் நடக்கிறது.

இதுகுறித்து வன அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டம் முழுவதும் தற்போது வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வனப்பகுதியில் தீ விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் தீ தடுப்பு மற்றும் மலை, வனக்கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

8 வனச்சரகத்திற்கு உட்பட்ட கிராம வனக்ககுழுவினரிடம், தற்போது கூட்டம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வனச்சரகத்திற்கு 15 வனக்குழு என்ற வீதத்தில் மொத்தம் 120க்கும் மேற்பட்ட குழுவினர், வனத்துறையினருடன் இணைந்து கண்காணிப்பில் உள்ளனர். ஒரு குழுவில் 20 முதல் 30 பேர் உள்ளனர். சரகத்தை பொறுத்து குழு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. வனப்பகுதியில் தீ வைப்போருக்கு வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வாய்ப்புள்ளது. ஒகேனக்கல், பென்னாகரம் உள்ளிட்ட வனத்துக்குள், எளிதில் தீ பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது,’ என்றனர்.

The post வெயிலின் தாக்கம் அதிகரிப்பு வனப்பகுதியில் தீ விபத்துகளை தடுக்க வனத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,forest department ,Dinakaran ,
× RELATED தர்மபுரி மாவட்டத்தில் அரசு...