×

புது மளிகை பொருட்கள் விற்பனை அமோகம்

 

போச்சம்பள்ளி, பிப்.12: போச்சம்பள்ளியில் நேற்று கூடிய வாரச்சந்தைக்கு அந்தியூர் பகுதியில் இருந்து துவரை வரத்து அதிகரித்த நிலையில், ஒரே நாளில் 30 டன் விற்பனையானது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் வாரந்தோறும் கூடும் சந்தை பிரசிதம். நேற்றைய சந்தைக்கு அரிசி, துவரம் பருப்பு, மிளகாய் உள்ளிட்ட புது மளிகை பொருட்கள் வரத்து அதிகரித்தது. சந்தைக்கு வந்த மக்கள் வீட்டு பயன்பாட்டிற்காக ஓராண்டுக்கு தேவையான மளிகளை பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்தனர். இதனால், விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக துவரையை போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர். இதனை நன்கு காய வைத்து உரிய முறையில் பதப்படுத்தி வைத்துக்கொண்டு ஆண்டு முழுவதும் வீட்டு சமையலுக்கு பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: தை அறுவடையின்போது கிடைக்கும் அரிசி தரமானதாக இருக்கும்.

அதேபோல், உள்ளூர் விவசாயிகள் சாகுபடி செய்து விற்பனைக்கு கொண்டு வரும் துவரையும் திடமாக காணப்படும். இதனால், தை மாதம் நடைபெறும் சந்தையில் அரிசி, துவரை உள்ளிட்ட புது மளிகை பொருட்களின் விற்பனை களை கட்டும். தரிசு நிலங்களில் மானாவாரியில் துவரை சாகுபடி செய்து வருகின்றனர். வானம் பார்த்த பயிரான துவரைக்கு கடந்தாண்டு எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால், விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் கடந்தாண்டை காட்டிலும் அதிகளவில் துவரையை பயிரிட்டிருந்த நிலையில், உரிய விளைச்சல் கிடைக்க வில்லை. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதிகளில் இருந்து மூட்டை மூட்டையாக லாரி, டெம்போக்கள் மூலம் போச்சம்பள்ளி சந்தைக்கு துவரையை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். கடந்தாண்டு கிலோ துவரை ₹70 முதல் ₹80 வரையிலும் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு ₹120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய(நேற்று) சந்தையில் 30 டன் துவரை விற்பனையானது. இதன்மூலம் ஒரே நாளில் சுமார் ₹40 லட்சம் வர்த்தகம் நடைபெற்றது.

The post புது மளிகை பொருட்கள் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Tags : Bochambally ,Dura ,Anthiur ,Krishnagiri District ,Bochampalli ,Dinakaran ,
× RELATED நெல் அறுவடை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை