×

நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகிறது மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு மாடல் அரசு: அமைச்சர் உதயநிதி பேச்சு

கோவை: தமிழ்நாட்டில் உள்ள நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு மாடல் அரசாக உள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு முடிவுற்ற திட்டங்களின் தொடக்கவிழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில்திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ரூ.1120.57 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்ட பணிகள் தொடக்க விழா மற்றும் ரூ.53.48 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு கூடம், ரூ.12.87 கோடி மதிப்பில் புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தும் இடம் ஆகியவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதேபோல், கோவை சரவணம்பட்டி குமரகுரு பொறியியல் கல்லூரி நடைபெற்ற விழாவில் கோவை மாநகராட்சி மற்றும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ரூ.780 கோடி மதிப்பில் பில்லூர்-3 குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள், கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த அன்னூர், சூலூர், அவிநாசி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 708 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.362.20 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய பணிகளுக்கான துவக்க விழா நேற்று நடந்தது.

இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 56 முடிவுற்ற திட்டப்பணிகளை துவங்கி வைத்து, ரூ.57 கோடி மதிப்பீட்டில் 62 பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 8,482 பயனாளிகளுக்கு ரூ.100.21 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உள்ள நகரங்களைவிட தமிழ்நாட்டில் உள்ள நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகிறது. பிற மாநிலங்களுக்கு சென்றால் அங்கு ஒரு நகரம் தான் வளர்ந்து இருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் சென்னை மட்டுமின்றி கோவை, சேலம் என பல நகரங்கள் வளர்ச்சி அடைந்து உள்ளது. நகரம் மட்டுமின்றி கிராமத்திலும் ஏராளமான சாதனைகளை செய்து உள்ளோம். எல்லா துறைகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு மாடல் அரசாக உள்ளது. இந்த மாடலை பின்பற்றினால்தான் மற்ற மாநிலங்களிலும் வளர்ச்சி இருக்கும் என பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். அடுத்த இரண்டு மாதங்கள் மிக முக்கியமான காலம். நான் என்ன சொல்ல வருகிறேன் என உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். கடந்த முறை தவறுகளை சரி செய்ய வேண்டும். நீங்கள்தான் அரசின் தூதுவர், முதல்வரின் முகமாக இருந்து அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

The post நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகிறது மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு மாடல் அரசு: அமைச்சர் உதயநிதி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Minister Udayanidhi ,Coimbatore ,Tamil Nadu ,Minister ,Udayanidhi Stalin ,Tirupur ,Udayanidhi ,
× RELATED ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடும்...