×

பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறியதால் ரூ.20 ஆயிரம் மதிப்பு பைக்குக்கு ரூ.3.20 லட்சம் அபராதம்: பைக்கை வேண்டுமானால் தருகிறேன், அபராதம் செலுத்த முடியாது என கூறிய நபரால் பரபரப்பு

பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பலமுறை விதிகளை மீறி, அதற்காக ரூ.50,000க்கு மேல் அபராத நிலுவைத்தொகை வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, நேரடியாக அவர்கள் வீட்டுக்கே சென்று அபராத தொகையை வசூலிக்க பெங்களூரு மாநகர போக்குவரத்து காவல் துறை இணை ஆணையர் அனுசேத் உத்தரவிட்டுள்ளார். அந்தவகையில், பெங்களூருவில் இதுவரை 300க்கும் அதிகமான முறை போக்குவரத்து விதிகளை மீறி, பெங்களூருவில் அதிகமான விதிமீறல் வழக்குகளை பெற்றதுடன், அதிகமான அபராத தொகை செலுத்த வேண்டியவராக திகழ்கிறார் வெங்கட்ராமன் என்பவர். KA 05 KF 7969 என்ற பதிவெண் கொண்ட ஹோண்டா ஆக்டிவா பைக்கை வைத்திருக்கும் வெங்கட்ராமன் என்பவர் பெங்களூரு சுதாமாநகரை சேர்ந்தவர்.

இவர் ஆர்.எஸ்.நகர், வில்சன் கார்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல், போக்குவரத்து போலீசார் மீதோ தன் உயிர் மீதோ எந்த பயமும் இல்லாமல் செல்போனில் பேசியபடி பலமுறை சென்றுள்ளார். அதனால் அவர் மீது போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 300 வழக்குகள் உள்ளன. 300க்கும் அதிகமான முறை விதிகளை மீறி வாகனம் ஓட்டிய அவர் ரூ.3.20 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டியுள்ளது. பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அதிகமான வழக்குகளுக்கு சொந்தக்காரர் இவரே. அந்த அபராத தொகையை வசூலிப்பதற்காக போலீசார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, என் பைக்கே வெறும் ரூ.20-25 ஆயிரம் தான். ஆனால் அபராதம் ரூ.3.20 லட்சமா? அதெல்லாம் செலுத்த முடியாது. வேண்டுமென்றால் பைக்கை தருகிறேன்; வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அபராதம் எல்லாம் செலுத்த முடியாது என்று போலீசாரிடம் கூறிவிட்டார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

The post பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறியதால் ரூ.20 ஆயிரம் மதிப்பு பைக்குக்கு ரூ.3.20 லட்சம் அபராதம்: பைக்கை வேண்டுமானால் தருகிறேன், அபராதம் செலுத்த முடியாது என கூறிய நபரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Dinakaran ,
× RELATED அணியின் நலனுக்காக புதிய...