×

தனியார் நிகழ்ச்சிகளால் நடந்த விபரீதம்; நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பலி

சென்னை: நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வார இறுதி நாட்களில் நடைபெறும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்லும் கேபிளில் ஏற்பட்ட கசிவினால் 6ம் வகுப்பு மாணவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தான். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை மயிலாப்பூர் டிசெல்வா சாலையை சேர்ந்தவர் தயாள் சுந்தரம். இவரது மனைவி கீதா பிரியா. இவர்களது 10 வயது மகன் ரியான் ஆதவ். டாக்டர் தம்பதியான இவர்கள் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர்.

ரியான் ஆதவ், ஆர்ஏபுரத்தில் உள்ள பிரபல பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். ரியான் ஆதவ், கூடைப்பந்து விளையாட்டில் மிகவும் ஆர்வமாக இருந்ததால், அவரது பெற்றோர் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கூடைப்பந்து விளையாட்டு பயிற்சியில் சேர்த்துள்ளனர். அதன்படி பள்ளி முடிந்து ரியான் ஆதவ் கூடைப்பந்து பயிற்சிக்கு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு சென்று பயிற்சி பெற்று வந்தார்.வழக்கம் போல் நேற்று மாலை ரியான் ஆதவ் பயிற்சிக்கு சென்றார். வார இறுதி நாட்களில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி நேற்று இசைக்கச்சேரி உட்பட 5 தனியார் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

தனியார் நிகழ்ச்சிக்காக பாதுகாப்பற்ற முறையில் மின்சாரம் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. கூடைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவன் ரியான் ஆதவ், கூடைப்பந்து மைதானத்தில் பாதுகாப்பற்ற முறையில் போடப்பட்டிருந்த மின் கேபிளில் கசிவு ஏற்பட்டு மாணவன் மீது பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணவன் துடிதுடித்து சிறிது நேரத்தில் மயக்கமடைந்தான். இதை பார்த்த பயிற்சியில் ஈடுபட்டிருந்த சக மாணவர்கள் உடனே ஒய்எம்சிஏ நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். அதன்படி 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மாணவன் ஆபத்தான நிலையில் இருந்ததால், மேல் சிகிச்சைக்காக அவனது பெற்றோர் பணியாற்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு மாணவனை ஆய்வு செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். அதை கேட்டு அவரது பெற்றோர் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதனர்.

இதுகுறித்து அளித்த புகாரின் படி, சைதாப்பேட்டை போலீசார் விபத்து நடந்த ஒய்எம்சிஏ மைதானத்தை தனியார் அமைப்புகளுக்கு வாடகைக்கு விடும் ஜான் சுதர்சன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பாதுகாப்பற்ற முறையில் மின்சாரம் கொண்டு சென்ற கேபிளில் மின் கசிவு ஏற்பட்டு மாணவன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் ஒய்எம்சிஏ மைதான நிர்வாகிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தனியார் நிகழ்ச்சிகளால் நடந்த விபரீதம்; நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Nandanam YMCA ,CHENNAI ,Chennai, Mylapore Tselva Road ,Dinakaran ,
× RELATED ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்