×

வடமதுரை நான்கு வழிச்சாலை சந்திப்பில் மேம்பாலம் இல்லாததால் தொடர் விபத்துகள்: கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வடமதுரை: வடமதுரையில் உள்ள நான்கு வழிச்சாலை சந்திப்பில் மேம்பாலம் இல்லாததால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இப்பகுதியில் மேம்பாலம் கட்ட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமதுரை நகர், திண்டுக்கல்லில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து நகர்களில் வடமதுரையும் ஒன்றாகும். வடமதுரை நகரின் வெளியே திண்டுக்கல்- திருச்சி நான்கு வழிச்சாலையும், வடமதுரை நகரின் வழியாக நத்தம்- ஒட்டன்சத்திரம் மாநில நெடுஞ்சாலையும் சந்திக்கும் முக்கிய சந்திப்பு உள்ளது. இச்சாலை சந்திப்பு வழியாக தான் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், திண்டுக்கல், திருச்சி, மணப்பாறை செல்லும் பஸ்களும் மற்றும் திண்டுக்கல்- திருச்சி நான்கு வழிச்சாலையில் தேனி, கம்பம், குமுளி, போடி, சின்னமனூர், திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைக்கானல் ஆகிய ஊர்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும் பஸ்களும் இருமார்க்கத்தில் பயணிக்கிறது. இதுதவிர தொழிற்சாலைகளுக்கு பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள், கண்டெய்னர்கள், பள்ளி- கல்லூரி வாகனங்கள் இச்சாலை சந்திப்பு வழியாகத்தான் பயணிக்கிறது. மேலும் வடமதுரையை சுற்றியுள்ள ஏராளமான கிராமமக்கள் நகருக்குள் வர இச்சாலை சந்திப்பை கடந்து தான் வந்து செல்கின்றனர். இதில் திருச்சி- திண்டுக்கல் சாலை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் கட்டுப்பாட்டிலும், நத்தம்- ஒட்டன்சத்திரம் சாலை மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு திண்டுக்கல்- திருச்சி நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. அப்போது இச்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டவில்லை. இதனால் இந்த இடத்தில் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலரும் உயிரிழந்துள்ளனர். எனவே இச்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்ட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பிலாத்து கிராமத்தை சேர்ந்த விவசாயி பெருமாள் சாமி (46) கூறியதாவது: வடமதுரையை அடுத்துள்ள அய்யலூர், நடுப்பட்டி, வையம்பட்டி போன்ற ஊர்களில் கூட நான்கு வழிச்சாலை அமைக்கும் போது மேம்பாலம் கட்டியுள்ளனர். ஆனால் திண்டுக்கல் மாநகருக்கு அடுத்ததாக வளர்ச்சி அடைந்து வரும் வடமதுரையில் தனியார் மில்கள், அரசு- தனியார் பள்ளிகள், அரசு துறை அலுவலகங்கள், ரயில் நிலையம் காவல் நிலையம் ஆகிய வசதிகள் அமைய பெற்ற இந்நகரின் மிக அருகே நான்கு வழிச்சாலை சந்திக்கும் இடத்தில் மேம்பாலம் கட்டாமல் விட்டுவிட்டனர். வடமதுரை பெருமாள் கோயில் காம்பவுண்டில் வாரந்தோறும் நடைபெறும் வாரச்சந்தையில் காய்களி, மளிகை பொருட்கள் வாங்க சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பலரும் இந்த நான்கு வழிச்சாலை சந்திப்பை கடந்து தான் வர வேண்டும். அப்போது எதிர்பாராத விதமாக விபத்துகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நான்கு வழிச்சாலை சந்திப்பில் விரைவில் மேம்பாலம் கட்டி கொடுத்து விலை மதிப்பற்ற மனித உயிர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

* ஒட்டன்சத்திரம் செல்வது ‘ஈஸி’

ஒட்டன்சத்திரம் செஒட்டன்சத்திரம் ரோட்டில் இருந்து வடமதுரைக்கு வரும் அனைத்து வாகனங்களும், சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்களும் இந்த நான்கு வழிச்சாலை சந்திப்பை கடந்து தான் உள்ளே வர முடியும். அப்படி வரும் போது நான்கு வழிச்சாலையின் இரு திசைகளிலும் அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்பட்டு இறந்தவர்கள் ஏராளம். அதுபோக திருச்சி ரோட்டில் இருந்து சென்னை, தஞ்சை, திருவாரூர், வேளாங்கண்ணி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து பழநி வரும் பக்தர்களின் வாகனங்கள் மற்றும் உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, பாலக்காடு போகும் சுற்றுலா வாகனங்களும், ஆம்னி பஸ்களும் இந்த நான்கு சாலை சந்திப்பிற்கு வந்து ஒட்டன்சத்திரம் ரோட்டில் திரும்பி பயணத்தை தொடர்கின்றனர். காரணம் திண்டுக்கல் போய் சுற்றி ஒட்டன்சத்திரம் வருவது அதிக தொலைவு மட்டுமின்றி எரிபொருள் விரயம் ஏற்படுவதனால் தான். ஆனால் இந்த நான்கு வழிச்சாலை சந்திப்பில் வேடசந்தூர் வழியாக ஒட்டன்சத்திரம் செல்வது குறைந்த தொலைவு, எரிபொருள் சிக்கனம் என்பதால் இச்சாலையில் அதிகளவு போக்குவரத்து நடக்கிறது. மேலும் பழநி தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழா காலங்களில் பக்தர்களின் வாகனங்கள் அதிகளவில் வருவதால் இச்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த நான்கு வழிச்சாலை சந்திப்பில் விரைந்து மேம்பாலம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பு.

The post வடமதுரை நான்கு வழிச்சாலை சந்திப்பில் மேம்பாலம் இல்லாததால் தொடர் விபத்துகள்: கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vadamadurai four-way junction ,Vadamadurai ,junction ,Vadamadurai Nagar ,Dindigul ,Dinakaran ,
× RELATED வடமதுரை- ஒட்டன்சத்திரம் சாலையோரம்...