×

நீர்த்தேக்கத்தில்‌ படிந்துள்ள வண்டல் மண் வைகை, சோத்துப்பாறை அணைகளை தூர்வார வேண்டும்: அதிகளவில் மழைநீரை தேக்கினால் விவசாயம் பெருகும் கோடையில் குடிநீர் சப்ளை பிரச்னை வராமல் தடுக்கப்படும்

* 5 மாவட்ட மக்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி/பெரியகுளம்: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்த்தேக்கத்தில் 20 அடிக்கும் மேல் வண்டல் மண் படிவங்கள் மற்றும் சேரும் படிந்துள்ளதால் அதிகளவு தண்ணீரை சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அணையை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி தாலுகாவில் வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பெய்து வரும் மழைநீர் மற்றும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஆற்றின் வழியாக சென்று கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை தேக்கி வைத்து முறையாக குடிநீருக்கும், பாசனத்திற்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு கடந்த 1959ம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை கட்டப்பட்டது. இந்த வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ள 5 மாவட்ட மக்களின் விவசாய பாசனத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது. 111 அடி உயரம் கொண்ட அந்த வைகை அணையில் 71 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.

இந்த வைகை அணை கட்டிய காலம் முதல் தூர்வாரப்படவில்லை. அணை தூர்வாரப்படாத காரணத்தால் வைகை அணை நீர்தேக்க பகுதிக்குள் 15 முதல் 20 அடி வரை வண்டல் மண் படிந்துள்ளது. இதனால் வைகை அணையில் தேங்கும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. வைகை அணையை தூர்வார வேண்டும் என தேனி மாவட்டம் உள்பட 5 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் அணையை தூர்வாருவதற்க்கான முதற்கட்ட ஆய்வு பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. பொதுப்பணித்துறையினர் நீர்தேக்கம் பகுதிக்குள் படகில் சென்று எக்கோ சவுண்டர் என்னும் கருவியின் உதவியுடன் வண்டல் மண் படிவங்கள் தேக்கம் குறித்து ஆய்வு நடத்தினர். அதன் பின்னர் அணையில் தேங்கியுள்ள வண்டல் மண் படிவத்தை தூர்வாருவதற்க்கான மதிப்பீடு பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்றது. மொத்த வைகை அணையை தூர்வார சுமார் 800 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இந்த தொகையை கொண்டு புதிய அணையை கட்டிவிடலாம் என்பதால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆனாலும் விவசாயிகள் வைகை அணையை தூர்வார வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பின்னர் மீண்டும்‌ அணையை தூர்வார அரசு‌ நடவடிக்கை மேற்கொண்டனர்.

அணையை தூர்வார அதிகமான நிதி தேவைப்படும் என்பதாலும், தூர்வாரப்படும் வண்டல் மண்ணை ஒரே நேரத்தில் அப்புறப்படுத்துவது சிரமம் என்பதாலும் வைகை அணையை 4 கட்டமாக தூர்வார திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக அணையின் ஒரு பகுதியை தூர்வார விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணியில் சில மாதங்களாக பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர். 183 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. இந்த நிதியின் மூலம் அணையின் 10 மில்லியன் கனமீட்டர் பரப்பளவு தூர்வாரப்படும் என தெரியவந்தது. அணை பயன்பாட்டிற்கு வந்த போது அணையின் ஆழம் எந்த அளவிற்கு இருந்ததோ, அதே அளவிற்க்கு தூர்வாரவும் முடிவு செய்யப்பட்டது. தூர்வாரும் போது அள்ளப்படும் வண்டல் மண்களை வைகை அணையை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் கொட்டிக் கொள்ள விவாசயிகள் ஒப்புதல் அளித்தனர். இதற்க்காக வைகை அணையை சுற்றியுள்ள 4500 விவசாயிகள் வண்டல் மண்ணை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்து பொதுப்பணித்துறையினரிடம் கடிதம் கொடுத்தனர். அதன்படி வைகை அணையில் அள்ளப்படும் நிலம், சம்மதம் தெரிவித்துள்ள விவசாயிகளின் நிலத்தில் ஒரு அடி உயரத்திற்க்கு வண்டல் மண்ணை கொட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான மதிப்பீடு பட்டியல் தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கடந்த அதிமுக அரசு அணையை தூர்வாரும் திட்டத்தை வெறும் திட்ட வடிவிலேயே வைத்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வைகை அணையை தூர்வார கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அணையை தூர்வாரும் திட்டம் கிடப்பிலேயே போடப்பட்டது. மேலும் தற்போது அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு வரை இருந்தாலும் 20 அடி வரை வண்டல் மண்ணும், சேறும் படிந்துள்ளது. வைகை அணை தூர்வாரப்படாததால் கோடைகாலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே அணையை தூர்வார தற்போதைய திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

* நீர்ப்பிடிப்பு பகுதியை விரிவுபடுத்துங்க

பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மணல் அதிகளவில் சேர்ந்துள்ளது. இதனால், அணையில் அதிகளவில் மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயத்திற்கு முக்கியத்தும் அளித்து வரும் தமிழக அரசு, அணையை தூர்வாரினால் அதிகளவில் நீரை தேக்க முடியும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் உள்ள உயரமான அணைகளில் ஒன்றாக சோத்துப்பாறை அணை இருக்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், கடந்த அதிமுக ஆட்சியில் முக்கியமான இந்த அணையே கண்டுகொள்ளப்படவில்லை. அதனால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி மிகவும் குறைந்த அளமாக மாறியது.இந்த அணையில் இருந்து வரும் தண்ணீரை நம்பியே, இப்பகுதியில் நெல், கரும்பு, மா, தென்னை உள்ளிட்ட விவசாயங்கள் நடந்து வருகிறது. ஆனால், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மண் தேங்கியிருப்பதால், அதிகளவில் மழைநீரை தேக்க முடியாத நிலை நீடிக்கிறது. வருடம் முழுவதும் பெரியகுளம் பகுதி மக்களுக்காக இந்த அணையில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகின்றது. மேலும் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுவதால் இந்த நீர்ப்பிடிப்பு பகுதியை விரிவுபடுத்துவதற்கான வேலைகளை தமிழக அரசு விரைந்து செய்து கொடுத்தால், இப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் பயன்படுவார்கள், என்றார்.

The post நீர்த்தேக்கத்தில்‌ படிந்துள்ள வண்டல் மண் வைகை, சோத்துப்பாறை அணைகளை தூர்வார வேண்டும்: அதிகளவில் மழைநீரை தேக்கினால் விவசாயம் பெருகும் கோடையில் குடிநீர் சப்ளை பிரச்னை வராமல் தடுக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Sothupparai ,Andipatti ,Periyakulam ,Vaigai dam ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரசாரம் விறுவிறு: டீக்கடைக்காரர்கள் `குஷி’