×

பள்ளபாளையம் பேரூராட்சியில் 3,701 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

பவானி: ஈரோடு மாவட்டம், பள்ளபாளையம் பேரூராட்சி,மல்லம்பாளையம்,மாரியம்மன் கோயில் வீதியில் அசோக்குமார்,கீதாதேவி ஆகியோருக்கு சொந்தமான கட்டிடத்தில், உரிய அனுமதி பெறாமல் பாலிபேக் நிறுவனம் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதன்பேரில், பள்ளபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷ்குமார், பெருந்துறை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் ஜோதி பிரகாஷ், விஏஓ பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி, சேமித்து வைத்து, விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், கடந்த 3 மாதங்களாக உரிய அனுமதி பெறாமலும், மறைமுகமாகவும், இரவு நேரங்களில் அதிக அளவில் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் 3,701 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், நகராட்சிகள் சட்டப்படி முதல்முறை அபராதத் தொகை ரூ.25 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. அந்த நிறுவனம் தொடர்ந்து செயல்பட தடை விதிக்கப்பட்டு, சுவற்றில் எச்சரிக்கை நோட்டீஸ் அறிவிப்பு ஒட்டப்பட்டது. இப்பேரூராட்சி பகுதியில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

The post பள்ளபாளையம் பேரூராட்சியில் 3,701 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Pallapalayam municipality ,Bhavani ,Ashokumar ,Geethadevi ,Mariamman temple road ,Mallampalayam, Erode district ,Pallapalayam Municipal Corporation ,Executive Officer ,Suresh Kumar ,Perundurai Pollution Control Board ,Dinakaran ,
× RELATED ரத்னம் விமர்சனம்