×

மாவட்ட ஈர நிலப்பகுதிகளில் 90 வகையான பறவைகள் கண்டுபிடிப்பு: மழை குறைவால் 19 இனங்கள் சரிவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் வனத்துறை சார்பில், 28 ஈர நிலப்பரப்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணி கடந்த மாதம் நடந்தது. இதில் 90 வகையான பறவை இனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மழை குறைவால் நடப்பாண்டு பறவை இனங்கள் வருகை சரிந்துள்ளது. தமிழகத்தில் வருடந்தோறும் வனத்துறை சார்பில், வடகிழக்கு பருவமழை முடிந்த பின், பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதில், ஈர நிலப்பகுதிகளில் வாழும் பறவைகள் மற்றும் இதர நிலப்பகுதியில் வாழும் பறவைகள் என 2 வகையான கணக்கெடுப்பை நடத்துவார்கள். தர்மபுரி மாவட்ட வனத்துறை சார்பில், தர்மபுரி வனக்கோட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், ஒகேனக்கல், பாலக்கோடு, மொரப்பூர், அரூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை ஆகிய 8 வனச்சரகத்தில் உள்ள ஈர நிலப்பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு 2 நாள் நடந்தது. இப்பணியில் வனச்சரகர்கள் தலைமையில், வன ஊழியர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் இணைந்து ஈடுபட்டனர்.

தர்மபுரி வனச்சரகத்தில் கோம்பேரி, நாகாவதி அணை, தொப்பூர் 60 அடி பாலம், பெரும்பாலை கோட்டாம்பள்ளி ஆகிய 4 ஈரநிலப்பகுதிகளில், பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 36 வகையான பறவைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தர்மபுரி வனச்சரகர் அருண்பிரசாத் தலைமையில் 4 குழுவினர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். ஒரு குழுவில் 5 பேர் என்ற வீதத்தில் 20 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். தர்மபுரி வனச்சரகத்தில் மட்டும் இந்த 4 இடத்திலும், பறவைகள் கடந்த ஆண்டைவிட கூடுதலாக இருப்பது தெரியவந்தது. அதன்படி, நாரை 500, கொக்கு 1696, நீர்காகம் 150, மீன்கொத்தி பறவை 150, மைனா 103, இரட்டைவால் குருவி 6, புல்புல் பேர்ட்ஸ் (செம்மீசைசின்னான்) 50, செம்போத்து (குயில்) 55, மயில் 120, காட்டுக்கோழி 6, கிளி 500, சிட்டுக்குருவி 250, காகம் 500 உள்ளிட்ட 36 வகையான பறவைகள் உள்ளன. மொத்தம் மாவட்டத்தில் 17,500 பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. பாலக்கோடு வனச்சரகத்தில் கேசர்குழி அணை, தாமரை ஏரி ஆகிய இடங்களில் 22 வகை பறவை வகைகளும், பென்னாகரம் வனச்சரகத்தில் 4 இடங்கள், ஒகேனக்கல் வனச்சரகத்தில் 2 இடங்கள், மொரப்பூர் வனச்சரகத்தில் 2 இடங்கள், அரூர் வனச்சரகத்தில் 3 இடங்கள், கோட்டப்பட்டி 7 இடங்கள், தீர்த்தமலையில் 4 இடங்கள் என மொத்தம் 28 இடங்களில், 140 பேர் இக்கணக்கெடுப்பை நடத்தினர்.

இதில், ஒகேனக்கலில் இந்தியன் கருவாட்சி என்ற வகை பறவை கண்டறியப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே உள்ள இந்த வகை பறவை, தற்போது ஒகேனக்கல்லில் காணப்படுகிறது. இதுபோக கழுகும் தென்பட்டுள்ளது. மேலும், நீர்நிலைகள் மற்றும் அதை சார்ந்த ஈர நிலங்களில் தாமரைக்கோழி, சங்குவளை நாரை, மஞ்சள் குருகு, கருங்கழுகு, சாம்பல் சிலம்பன், மஞ்சள் தொண்டை சிட்டு, நத்தை குத்தி நாரை, வண்ணநாரை, கருப்பு அரிவாள் மூக்கன், உள்ளான், நீர்காகம், உண்ணிகொக்கு, செம்பருந்து ஆகியவையும், வெளிநாட்டு பறவைகளான வெண்புருவ வாத்து, தட்டைவாயன், ஊசிவால் வாத்து, கிளுவை, கோரைகொத்தி, மண்கொத்தி, பச்சை மண்கொத்தி, பொறி மண்கொத்தி, பச்சைக்கால் உள்ளான், பழுப்பு கீச்சான், வேலி கதிர்க்குருவி, மஞ்சள் வாலாட்டி உள்ளிட்ட 90 வகையான பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வன அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் ஈர நிலப்பகுதியில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிற மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்து வந்துள்ள பறவைகளை கண்டு தனியாகப் பதிவு செய்கிறோம். நடப்பாண்டு சில புதிய பறவைகளைப் பார்க்கிறோம். எத்தனை வகையான பறவைகளை கண்டறிந்தோம் என்பதை பதிவிட்டு, வனத்துறையின் தலைமையிடத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். தர்மபுரி வனக்கோட்டத்தில் 28 நீர்நிலைப்பகுதி மற்றும் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 90 வகையான பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த ஆண்டு 109 வகையான பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. நடப்பாண்டு பறவை இனங்கள் வருகை குறைந்துள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்தது. மாவட்டத்தில் பருவமழை போதிய அளவில் பெய்யாததால், நீர்நிலைகளில் போதிய நீர் இல்லை. இதனால் பறவை இனங்கள் வருகை சரிந்துள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மாவட்ட ஈர நிலப்பகுதிகளில் 90 வகையான பறவைகள் கண்டுபிடிப்பு: மழை குறைவால் 19 இனங்கள் சரிவு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சிறப்பு மையத்தில் தபால் வாக்களித்த அலுவலர்கள்