×

கீழ்பவானியில் 5550 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

 

ஈரோடு,பிப்.11 :கீழ்பவானி பாசனத்தில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 5550 மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் போகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.ஈரோடு, திருப்பூர்,கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் அமைந்துள்ள இப்பாசனத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் கடந்த மாதம் அறுவடைக்கு தயாரானதையடுத்து அறுவடை செய்த விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வசதியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. முதல்கட்டமாக நசியனூர், கூகலூர், நாதிபாளையம், அளுக்குழி, கலிங்கியம் உள்பட 6 இடங்களில் 6 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.

பின்னர் பொங்கல் பண்டிகைக்கு பிறகு அறுவடை பணிகள் தீவிரமடைந்ததையடுத்து பிற இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. மொத்தம் 35 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் வரை 35 கொள்முதல் நிலையங்களில் 5 ஆயிரத்து 550 மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்தாண்டு 60க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு சாகுபடி பரப்பளவு குறைந்தததால் 35 இடங்களில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

The post கீழ்பவானியில் 5550 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Kilpawani ,Erode ,Kheelbhawani ,Bhavanisagar dam ,Kilibhavani ,
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்