×

சுங்குவார்சத்திரம் காவல் நிலையம் அருகே சினிமா பாணியில் செல்போன் திருடர்களை துரத்தி பிடித்த போலீசார்: தப்பி ஓடியபோது கீழே விழுந்ததில் எலும்பு முறிவு


ஸ்ரீபெரும்புதூர்: சுங்குவார்சத்திரம் காவல் நிலையம் அருகே இளைஞரிடம் செல்போன் பறித்து தப்பிச்சென்ற 2 திருடர்களை, சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில், போலீசார் விரட்டிச்சென்று கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (30). இவர், சுங்குவார்சத்திரம் காவல் நிலையம் அருகே நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் ஸ்ரீதரிடமிருந்து செல்போனை பறித்தனர். அப்போது, ஸ்ரீதர் திருடர்கள் என கூச்சலிடவே கொள்ளையர்கள் இருவரும் பைக்கில் தப்பிச் சென்றனர். இதனையடுத்து சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை நோக்கி தப்பிய இருவரையும் பிடிக்க, போலீசார் காரில் துரத்திச் சென்றனர்.

உடனே ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு கொள்ளையர்கள் தப்பிச் செல்வதை வாக்கி டாக்கி மூலம் போலீசார் தகவல் கொடுத்தனர். தகவலின்படி ஸ்ரீபெரும்புதூர் போலீசார், தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் கனரக வாகனங்களுக்கிடையே கொள்ளையர்கள் பைக்குடன் மறைந்து இருந்ததை கண்டறிந்த போலீசார், 2 பேரையும் சுற்றிவளைத்தனர். இதனையறிந்த கொள்ளையர்கள் தப்பிச்செல்ல முற்படும்போது, அவர்கள் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு இருவரையும் அழைத்துச்சென்ற போலீசார், மருத்துவர்கள் மூலம் மாவுக்கட்டு போட்டனர்.

பின்னர், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாலாஜி (22), எழும்பூர் பகுதியைச் சேர்ந்த ரோஷன் (22) என்பதும், இவர்கள் 2 பேரும் காஞ்சிபுரம் பாலுசெட்டிசத்திரத்தில் இதுவரை 3 பேரிடம் செல்போன் பறித்ததும் தெரியவந்தது. இருவர் மீதும் சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் செயின் பறிப்பு, கஞ்சா கடத்தல், பைக் திருட்டு போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் கைதான 2 பேரிடமிருந்து விலை உயர்ந்த செல்போன்கள், சம்பவத்துக்கு பயன்படுத்திய பைக் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post சுங்குவார்சத்திரம் காவல் நிலையம் அருகே சினிமா பாணியில் செல்போன் திருடர்களை துரத்தி பிடித்த போலீசார்: தப்பி ஓடியபோது கீழே விழுந்ததில் எலும்பு முறிவு appeared first on Dinakaran.

Tags : Chungwarchatram police ,Sriperumbudur ,Sunguarschatram ,police station ,Chennai-Bangalore ,highway ,Thirumangalam ,Chungwarchatram ,Sungwarchatram police station ,
× RELATED சென்னையில் தபால் வாக்குப்பதிவு...