×

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு மருத்துவ சான்று இல்லாமல் விடுப்பு கோரி வழக்கு: ஒன்றிய அரசை அணுக ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: மாதவிடாயின் போது பெண்களுக்கு மருத்துவ சான்றிதழ் இல்லாமல் விடுப்பு வழங்கக் கோரி ஒன்றிய அரசை அணுகலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், மாதவிடாய் காலங்களில் பணிக்கு வரும் பெண்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மாதவிடாய் என்பது நோய் அல்ல. அதற்கு மருத்துவச் சான்றிதழ் பெறுவது இயலாதது என்பதால் மருத்துவச் சான்று இல்லாமல் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குமாறு உத்தரவிட வேண்டும். பீகாரில் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்படுகிறது. கேரளாவில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு விடுப்பு வழங்கப்படுகிறது.

மலையாள தொலைக்காட்சி உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்களிலும் விடுப்பு வழங்கப்படுவதால், தமிழகத்தில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுப்பு வழங்கக் கோரிய தனது விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து கொள்கை வகுக்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுசம்பந்தமாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை அணுகும்படி உத்தரவிட்டுள்ளது. அதேபோல் மனுதாரரும் ஒன்றிய அரசு அணுகலாம் என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

 

The post மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு மருத்துவ சான்று இல்லாமல் விடுப்பு கோரி வழக்கு: ஒன்றிய அரசை அணுக ஐகோர்ட் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union Govt. ,CHENNAI ,Madras High Court ,Union government ,Tirunelveli ,Chennai High Court ,
× RELATED வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதாக...