×

டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் 14 சவரன் கொள்ளை: ‘மறுமணம்’ விளம்பரத்தை பார்த்து வந்த பெண்கள் கைவரிசை

திருவொற்றியூர்: திருவொற்றியூர், மேற்கு மாட வீதி தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (60), மத்திய தரக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி. இவரது மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் ஆனந்தன், ஒரு திருமண தகவல் மையத்தில் தனக்கு மறுமணம் செய்ய பெண் வேண்டும் என்று பதிவு செய்திருந்தார். இதனையடுத்து கடந்த 31ம் தேதி திருச்சி உறையூரைச் சேர்ந்த சரண்யா என்ற பெண், ஆனந்தனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தான் மறுமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அந்தப் பெண்ணை தனது வீட்டுக்கு வருமாறு கூறி விலாசத்தையும் கொடுத்துள்ளார். அதன்படி அன்று மாலை தோழி ஒருவருடன் சரண்யா வந்துள்ளார். இரவு நேரமாகி விட்டதால் அங்கேயே தங்கி விட்டு மறுநாள் சென்று விடுகிறோம் என்று இரு பெண்களும் கூறி உள்ளனர். ஆனந்தனும் அவர்கள் இருவரையும் வீட்டில் தங்க வைத்து, இரவில் 3 பேரும் ஜாலியாக பேசியுள்ளனர். பின்னர் டீ வைத்து தருகிறேன் என்று கூறிய சரண்யா சமையல் அறைக்குச் சென்று டீ போட்டு கொடுத்துள்ளார்.

அதை குடித்த ஆனந்தன் சிறிது நேரத்தில் படுக்கை அறையிலேயே மயங்கிவிட்டார். மறுநாள் காலை விழித்துப் பார்த்தபோது, அந்த இரண்டு பெண்களும் மாயமாகி விட்டார்கள். இதனால் சந்தேகம் அடைந்த ஆனந்தன், பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 14 சவரன் தங்க நகை மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவை திருடு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஆனந்தன் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தன் வீட்டு அருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில், நூதன முறையில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற இரண்டு பெண்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் 14 சவரன் கொள்ளை: ‘மறுமணம்’ விளம்பரத்தை பார்த்து வந்த பெண்கள் கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Thiruvottiyur ,Anandan ,West Mada Veedhi Street, Thiruvottiyur ,Central Quality Control Office ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!