×

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்கு விரைவில் ஒப்புதல் தர வேண்டும்: l ஒன்றிய அரசின் தாமதத்தால் திட்டப் பணிகள் முடக்கம்

சென்னை: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்காததால், நிதி கிடைக்கவில்லை. இதனால் திட்டப்பணிகள் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு நிதி நெருக்கடியிலும் திட்டப்பணிகளுக்கான தொகையை ஒதுக்குவதால் உடனடியாக ஒன்றிய அரசும் நிதியை ஒதுக்கி 2ம் கட்ட திட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, முதல்கட்ட மெட்ரோ ரயில் கடந்த 2016 முதல் படிப்படியாக அமலுக்கு வந்தது. அந்தவகையில், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை மற்றும் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை என மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைய தொடங்கியது. குறிப்பாக, பள்ளி – கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், வணிகம் செய்வோர் என லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வரும் நிலைக்கு மெட்ரோ ரயில் என்பது பிரதான இடத்தை பிடித்துள்ளது. பயண நேரம் குறைவு, நல்ல வசதி போன்ற காரணங்களால் பலரும் இப்போது மெட்ரோ ரயிலில் தான் பயணிக்கின்றனர். இந்நிலையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட திட்டம் 3வது வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 76 உயர்நிலைப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள், 43 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் என 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளது.

பணிகள் நடைபெறும் நிலையில் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு இத்திட்டத்திற்கான நிதியை தராமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதன் காரணமாக மாநில அரசு நிதி நெருக்கடியில் இருந்தாலும் இப்பணிகளை விரைந்து முடிக்க நிதி ஒதுக்கி வருகிறது. அதேவேளையில் ஒன்றிய அரசு, மாநில அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நிதி ஒதுக்குவதில் தாமதம், மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் பாகுபாடு என செயல்பட்டு வருகிறது. பணிகள் தொடங்கி விட்டதால் நகரின் பல இடங்களில் சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததால், திட்டம் வேகம் பிடிக்கவில்லை. மாநில அரசுக்கு கெட்ட பெயர் உண்டாக்குவதற்காகவே ஒன்றிய அரசு நிதி ஒதுக்காமல் காலம் தாழ்த்துவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒன்றிய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில், 50:50 என்ற சமபங்கு வீதத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன. இதனடிப்படையில், 63,246 கோடி ரூபாய் செலவில், 119 கிலோமீட்டர் நீளமுள்ள மேலும் மூன்று வழித்தடங்களைக் கொண்ட 2ம் கட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2019 ஜனவரி மாதத்தில் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது.

ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றின் பரிந்துரையுடன், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் நிதி ஒப்புதல்களும் இறுதி செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. இதற்குப் பிறகு, ஒன்றிய உள்துறை அமைச்சர் 21-11-2020 அன்று சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதாகத் தெரிவித்துள்ளார். 2021-22க்கான ஒன்றிய பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கான எதிர் நிதியுதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னரும், 17-8-2021 அன்று பொது முதலீட்டு வாரியத்தால் பங்கு பகிர்வு மாதிரியின் கீழ் மத்திய துறை திட்டமாக பரிந்துரைக்கப்பட்ட நிலையிலும், ஒன்றிய அரசின் ஒப்புதலை தமிழ்நாடு அரசு ஆவலுடன் எதிர்பார்த்தது. ஆனால், பிரதமருடன் பல்வேறு சந்திப்புகளின்போது இது தொடர்பாக தான் வலியுறுத்தி வந்தபோதிலும், இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தத் திட்டத்திற்கான முன்மொழிவு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்கிறோம்.
ஒன்றிய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டம் முடிக்கப்படுவதை உறுதி செய்திட ஏதுவாக, இரண்டாம் கட்டப் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் இல்லாத நிலையில், ஒன்றிய அரசின் பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மாநில நிதியில் இருந்து செலவினங்களை மேற்கொண்டு வருகிறோம். இது பணிகளின் வேகத்தைக் குறைத்துள்ளதோடு, மாநில அரசுக்குக் கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். அப்போதுதான் சென்னை மக்களின் இந்த கனவுத் திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த முடியும். எனவே, இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டு, முதல் கட்டப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றிச் செயல்படுத்தியதைப்போல, 50:50 என்ற சமபங்கு வீதத்தில், ஒன்றிய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணிகளையும் விரைந்து நிறைவேற்றிட ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

The post சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்கு விரைவில் ஒப்புதல் தர வேண்டும்: l ஒன்றிய அரசின் தாமதத்தால் திட்டப் பணிகள் முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Union government ,Tamil Nadu government ,
× RELATED ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு வினாத்தாள் மொழிமாற்றம்: ஐகோர்ட் யோசனை