×

17வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு பிரதமர் மோடி கடைசி உரை: இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு

புதுடெல்லி: பாஜவின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சி சீர்திருத்தம், செயல்திறன், மாற்றங்களை கொண்ட காலம் என மக்களவையின் கடைசி கூட்டத்தொடரில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. மோடி தலைமையிலான பாஜ அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் 16ம் தேதி நிறைவடைகிறது. இந்த அரசின் கடைசி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் கடந்த 31ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. மக்களவை தேர்தலுக்கு முந்தைய இறுதி அமர்வில் மக்களவையில் பிரதமர் மோடி நேற்று இறுதியாக உரையாற்றினார்.

அப்போது அவர் கூறும்போது,“17வது மக்களவையின் 5 ஆண்டுகால ஆட்சி சீர்திருத்தம், செயல்திறன், மாற்றங்களின் காலம். கடந்த 5 ஆண்டுகளில் 21ம் நூற்றாண்டின் இந்தியாவின் அடித்தளத்தை மாற்றும் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. பெரிய மாற்றங்களை நோக்கி நாடு மிக வேகமாக விரைந்துள்ளது. மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த பணிகள் நிறைவடைந்துள்ளன. 17வது மக்களவையில், காஷ்மீரின் 370வது பிரிவை நீக்கம், முத்தலாக் தடை சட்டம் உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கொரோனா பெருந்தொற்றின் மிக நெருக்கடியான காலத்தை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டோம். நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் வேண்டுமென்று முன்பு பேசப்பட்டது.

17வது மக்களவை அதை நிறைவேற்றி, அங்கு செங்கோலை நிறுவியது. 17வது மக்களவையின் செயல்திறன் 97 சதவீதமாக இருந்தது. 18வது மக்களவையில் அது 100 சதவீதமாக மாற வேண்டும். அரசின் செயல்களை சாத்தியமாக்கிய 17வது மக்களவையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. அவையில் என்ன நடந்தாலும் புன்முறுவலுடன் அதை எளிதாக அவைதலைவர் ஓம் பிர்லா சமாளித்தார். கோபங்கள், குற்றச்சாட்டுகளை கடந்து அவையை புத்திசாலித்தனமாக, பாரபட்சமற்ற முறையில் நடத்திய அவைதலைவர் ஓம் பிர்லாவுக்கு பாராட்டுகள். நன்றிகள்” என்று தெரிவித்தார். இதையடுத்து 17வது மக்களவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி கூட்டம் நிறைவுபெற்றது. இதையடுத்து நாடாளுமன்ற இரு அவைகளும் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன.

The post 17வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு பிரதமர் மோடி கடைசி உரை: இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,17th Parliament session ,Houses ,New Delhi ,Lok Sabha ,Modi ,BJP ,Houses of Parliament ,BJP government ,Dinakaran ,
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!