×

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வலுவான நிலையில் கர்நாடகா

சென்னை: தமிழ்நாடு அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் சி பிரிவு லீக் ஆட்டத்தில், கர்நாடகா அணி வலுவான நிலையில் உள்ளது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன் எடுத்திருந்தது. தேவ்தத் படிக்கல் 151 ரன், ஹர்திக் ராஜ் 35 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். படிக்கல் மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல், பிரதோஷ் ரஞ்சன் பால் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

ஹர்திக் ராஜ் 51, ஸ்ரீனிவாஸ் சரத் 45, விஜய்குமார் 0, சஷி குமார் 9 ரன்னில் வெளியேற, கர்நாடகா முதல் இன்னிங்சில் 366 ரன் குவித்து ஆல் அவுட்டானது (119.4 ஓவர்). தமிழ்நாடு பந்துவீச்சில் அஜித் ராம் 4, சாய் கிஷோர் 3, முகமது 2, ரஞ்சன் பால் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு அணி அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் ரன் குவிக்க முடியாமல் திணறியது. 2ம் நாள் ஆட்ட முடிவில் தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன் மட்டுமே சேர்த்துள்ளது. நாராயண் ஜெகதீசன் 40, விமல் குமார் 14 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.

பாபா இந்திரஜித் 35 ரன், முகமது முகமது 3 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 3 விக்கெட் இருக்க, 237 ரன் பின்தங்கிய நிலையில் தமிழ்நாடு அணி இன்று 3ம் நாள் சவாலை எதிர்கொள்கிறது. புதுச்சேரி திணறல்: ஜம்மு மற்றும் காஷ்மீர் அணியுடன் நடக்கும் டி பிரிவு லீக் ஆட்டத்தில், வெறும் 87 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய புதுச்சேரி அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 35 ரன் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீர் 106 மற்றும் 152; புதுச்சேரி 172 மற்றும் 35/7 (23 ஓவர்).

The post ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வலுவான நிலையில் கர்நாடகா appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Ranji Cup ,CHENNAI ,Ranji Cup Elite C ,Tamil Nadu ,MA Chidambaram Stadium ,Chepakkam ,Dinakaran ,
× RELATED ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள்...