×

தை அமாவாசை கன்னியாகுமரியில் பகவதியம்மனுக்கு ஆறாட்டு


கன்னியாகுமரி: தை அமாவாசையை முன்னிட்டு சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்பகுதியில் நேற்று அதிகாலை 4 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தனர்.அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு, கடற்கரையில் அமர்ந்திருந்த புரோகிதர்கள், வேதமந்திரம் ஓதுபவர்களிடம் முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜையும், தர்பணமும் செய்தனர். அதைத்தொடர்ந்து கடற்கரையில் அமைந்துள்ள பரசுராமர் விநாயகர் கோயில், பகவதியம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை, உஷ பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது.4.30 மணியளவில் வடக்கு பிரதான நுழைவு வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இரவு 8.30 மணிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அந்த சமயத்தில் வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து வழிபட்டனர். இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் ஆறாட்டு நிகழ்ச்சி நடந்தது.

வருடத்தில் 5 முக்கிய விஷேச நாட்களில் கோயிலின் கிழக்கு வாசல் திறக்கப்படும். இந்த முறையும் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோயிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து கோயிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க வலம் வர செய்தனர். பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோயில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோயில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோயில் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

The post தை அமாவாசை கன்னியாகுமரியில் பகவதியம்மனுக்கு ஆறாட்டு appeared first on Dinakaran.

Tags : Bhagavatiyamman ,Kanyakumari ,Tai ,Triveni Sangam beach ,Tai Amavasai ,
× RELATED தர்பூசணி உற்பத்தி செய்யக்கூடிய தொழில்நுட்பங்கள்