×

ஒற்றை காலுடன் 3 ஆண்டாக முடங்கி கிடந்த முதியவருக்கு மறுவாழ்வு தந்த மக்களை தேடி மருத்துவ திட்டம்

தஞ்சை: தஞ்சை மகர்நோன்பு சாவடி உக்கடை அம்பாள் காலனியில் வசித்து வருபவர் தேவதாஸ்(64). கடந்த 2021ம் ஆண்டு சர்க்கரை நோயினால் இவரது வலது காலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அகற்றினர். அப்போது முதல் ஒரே காலுடன் நடமாட்டம் இல்லாமல் படுத்த படுக்கையிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் 2023 ஜூலை மாதம் சுகாதார தன்னார்வலர் பவானி, மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளை தேவதாஸ் வீட்டிற்கு கொண்டு சென்றபோது அவரது நிலையை கண்டு, அதனை இயன்முறை மருத்துவர் கோகுலிடம் தெரிவித்தார்.

இதையறிந்த இயன்முறை மருத்துவர் கோகுல் மக்களைத்தேடி மருத்துவ திட்ட சிகிச்சைக்கான வாகனத்தில் தேவதாஸ் வீட்டிற்கே சென்று பரிசோதனை மேற்கொண்டதில் 3 ஆண்டுகள் நடமாட்டம் இல்லாமல் படுக்கையில் இருந்ததால் தேவதாசுக்கு இடதுகால் மற்றும் இடுப்பு தசைகளில் பலகீனம் இருப்பதை கண்டறிந்து அதனை சரிசெய்ய இயன்முறை பயிற்சி நெறிமுறையினை வடிவமைத்தார். இதன்படி தசை மற்றும் மூட்டு வலுவடைய 5 மாதங்கள் தொடர்ந்து பயிற்சி வழங்கி வந்ததால் 3 ஆண்டு வீட்டிலேயே படுத்த படுக்கையிலேயே இருந்ததை விட்டு தேவதாஸ் வெளியில் வந்து தான் வசிக்கும் தெருவில் ஊன்றுகோல் உதவியுடன் நடக்க தொடங்கினார். மேலும் அடுத்த கட்டமாக தஞ்சை மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவின்படி தேவதாசுக்கு செயற்கை கால் பொருத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தஞ்சை மாநகராட்சி மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி நேற்று தேவதாஸ் வீட்டிற்கு சென்று அவரது உடல்நிலை முன்னேற்றம் பற்றி கேட்டறிந்தார். மேலும் அவருக்கு சிறப்பான சிகிச்சை மேற்கொண்ட இயன்முறை மருத்துவர் கோகுலுக்கு தேவதாஸ் சால்வை அணிவித்து பாராட்டினார். இதுகுறித்து தேவதாஸ் கூறுகையில், மக்களைத் தேடி மருத்துவ திட்டமே தற்போது நான் நடமாடுவதற்கு உதவியாக இருந்ததாக கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

The post ஒற்றை காலுடன் 3 ஆண்டாக முடங்கி கிடந்த முதியவருக்கு மறுவாழ்வு தந்த மக்களை தேடி மருத்துவ திட்டம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Devdas ,Ukkadai Ambal Colony ,Thanjavur Makarnonbu Sawadi ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...