×

தை அமாவாசையை முன்னிட்டு திருமூர்த்தி அணை கரையில் மாட்டு வண்டியுடன் குவிந்த விவசாயிகள்

உடுமலை : தை அமாவாசையை முன்னிட்டு திருமூர்த்தி அணை கரையில் மாட்டு வண்டியுடன் விவசாயிகள் குவிந்தனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகின்றனர்.

அமாவாசை, பவுர்ணமி, ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தில் விவசாயிகள் மாட்டு வண்டியுடன் திருமூர்த்திமலைக்கு வருவது வழக்கம்.அதன்படி, நடப்பாண்டு தை அமாவாசை தினமான நேற்று உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் திருமூர்த்தி மலையில் குவிந்தனர்.

நேற்று முன்தினம் இரவு முதலே வரத்தொடங்கினர். திருமூர்த்தி அணை கரையோரம் மாட்டு வண்டிகளை நிறுத்தியிருந்தனர். நேற்று காலை அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு சென்று கால்நடைகள் நோய் நொடியின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பின்னர் பஞ்சலிங்க அருவியில் குளித்துவிட்டு, அணை கரையில் இளைப்பாறினர். குடும்பத்துடன் உணவு அருந்தி மகிழ்ந்தனர்.இதனால் திருமூர்த்தி அணை கரையோரம் எங்கு பார்த்தாலும் மாட்டு வண்டிகளாக தென்பட்டது.

The post தை அமாவாசையை முன்னிட்டு திருமூர்த்தி அணை கரையில் மாட்டு வண்டியுடன் குவிந்த விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Tirumurthy Dam ,Tai Amavasai ,Udumalai ,Tirupur district ,Tirumurthimalai ,Amanalingeswarar temple ,Thai new moon ,
× RELATED பிஏபி முதலாம் மண்டல பாசன கால்வாயில்...