×

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பருத்தி செடிகளில் நோய் தாக்குதல்

*வேளாண் அதிகாரிகள் ஆய்வு

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள புல்லமடை, ராமநாதமடை, ஆர்.வி.வாகை, சேத்திடல், வரவணி உள்ளிட்ட கிராமங்களில் பருத்தி அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இச்செடிகளில் சாறு உறிஞ்சும் பச்சை தத்துப்பூச்சி, அசுவினி, இலைப்பேன், மாவுப்பூச்சி மற்றும் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. இப்பூச்சிகள் சாறை உறிஞ்சுவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி சுருங்கும். பச்சை தத்துப்பூச்சியின் தாக்குதலால் இலைகளின் ஓரம் சிவப்பு நிறமாகி கருக தொடங்கும். இவற்றின் தாக்குதலால் பருத்தி செடிகள் வீணாகி மகசூல் கடுமையாக பாதிக்கப்படும்.

இதையடுத்து வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி முனைவர் ராம்குமார் தலைமையிலான வேளாண் துறை அதிகாரிகள் பருத்தி வயல்களில் நேரில் ஆய்வு செய்தனர். பின் அவர்கள் விவசாயிகளுக்கு நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை வழங்கினர். அதன் விபரம் வருமாறு: பருத்தி வயல் மற்றும் வரப்புகளில் களைகள் இல்லாமல் வைத்திருக்க வேண்டும். தழைச்சத்து உரங்களை பிரித்து இடுவதுடன், பயறுவகைப் பயிர்களை வரப்பு மற்றும் ஊடுபயிராக பயிரிட்டால் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கும்.

ஒரு ஏக்கருக்கு தையாமீத்தாக்சிம் 25% டபிள்யூஜி 40 கிராம் அல்லது புப்ரோபெசின் 25% எஸ்சி 400 மிலி அல்லது அசிட்டாமிபிரிட் 20% எஸ்பி 20 கிராம் அல்லது புளோனிக்கமடு 50% டபிள்யூஜி 24 கிராம் இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் அல்லது பேட்டரி தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்கலாம். வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த டிரைஅசோபாஸ் 40% இசி மருந்தை ஒரு ஏக்கருக்கு 600 மில்லி லிட்டர் நீரில் தெளிக்கவும்.

மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் 3% கரைசல் அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு மீன் எண்ணெய் திரவம் 10 மில்லியுடன், வேப்பெண்ணெய் 2 மிலி கலந்து தெளிக்கலாம். அல்லது புரொபனோபாஸ் 50% இசி மருந்தை ஒரு ஏக்கருக்கு 500 மில்லி லிட்டர் அல்லது புப்ரோபெசின் 25 இசி 500 மிலி மருந்துகளை சுழற்சி முறையில் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். இவ்வாறு கூறினர். இந்த ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குநர் நாகராஜன், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜலட்சுமி மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் கலந்து உடனிருந்தனர்.

The post ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பருத்தி செடிகளில் நோய் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,Pullamadai ,Ramanathamataida ,RV Vagai ,Chetital ,Varavani ,Dinakaran ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோரு