×

தமிழகத்தில் ஈரநில பறவைகளின் எண்ணிக்கை மொத்தம் 6,80,028: அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஈரநில பறவைகளின் எண்ணிக்கை மொத்தம் 6,80,028 என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: வனத்துறையால் நடத்தப்பட்ட 2024ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பறவைகள் மதிப்பீட்டின் புள்ளிவிவரத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும், 2024 ஜனவரி 27 மற்றும் 28 தேதிகளில் 894 சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள், பறவைகள் சரணாலயங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மதிப்பீடு நடத்தப்பட்டது. வனப்பகுதிகளில் 179, கிராமப்புறங்களில் 555 மற்றும் நகர்ப்புறங்களில் 170 என மொத்தம் 894 முனையங்களில் மதிப்பீடு செய்யப்பட்டன.

இந்த ஆண்டு 389 பறவை இனங்களுடன் ஒருங்கிணைந்த மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த பறவைகளின் எண்ணிக்கை 6,80,028 ஆகும். அவற்றில் 120 இனங்கள் நீர்ப்பறவைகள், மீதமுள்ள 269 நிலப்பறவை இனங்களை சேர்ந்தவை.
மொத்த பறவை எண்ணிக்கையான 6,80,028ல் 79% நீர்ப்பறவைகள் (5,36,245) மற்றும் 21% நிலப்பறவைகள் (1,43,783) என மதிப்பிடப்பட்டுள்ளது. 6,450 தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வனத் துறையை சேர்ந்த 3350 பணியாளர்கள் என மொத்தம் 9800 பேர் இந்த மதிப்பீட்டில் பங்கேற்றனர்.

மாநில அளவிலான ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் மதிப்பீடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ரா.ரெட்டி மேற்பார்வையிலும், ராகேஷ் குமார் டோக்ரா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (புலிகள் திட்டம்), வீ.நாகநாதன், கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் (வன உயிரினம்) மற்றும் அ.ஷர்மிலி, உதவி வனப்பாதுகாவலர் (வன உயிரினம்) ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீர்ப்பறவைகள் விவரங்கள்
1. நீர் வாத்து 69,913
2. பூ நாரை 28,822
3. முக்குளிப்பான்கள் 6,789
4. கடற்கரை பறவை 19,919
5. கடற்புறா, ஆலா வகைகள் 1,73,294
6. பெருங்கொக்குகள் 17,865
7. பாம்பு தாரா மற்றும்
நீர்க்காகங்கள் 54,008
8. கூழைக்கடா, நாரை, கொக்குகள், அரிவாள்மூக்கன் மற்றும் கரண்டிவாயன் வகைகள் 1,65,635
மொத்தம் 5,36,245

The post தமிழகத்தில் ஈரநில பறவைகளின் எண்ணிக்கை மொத்தம் 6,80,028: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Forest Department ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...