×

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் வெற்றி: சுயேட்சையாக போட்டியிட்டு அபாரம், நவாஸ், பிலாவல் பூட்டோ படுதோல்வி


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக களம் இறங்கிய இம்ரான்கான் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றனர். நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ படுதோல்வி அடைந்தனர். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உள்ள 226 தொகுதிகளுக்கும், நான்கு மாகாணங்களுக்கும் நேற்றுமுன்தினம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி, மற்றொரு முன்னாள் பிரதமரும், ஊழல் உள்பட பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி, முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் சர்தாரி பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை போட்டியிட்டன.

265 தொகுதிகளில் 5,121 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 4 மாகாண தேர்தலில் 12,695 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி சார்பில் சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கிய பலர் முன்னிலை பெற்றனர். இம்ரானின் ஆதரவாளர்களுக்கு கிரிக்கெட் மட்டை சின்னம் ஒதுக்கப்படாததால், அவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் தனித்தனி சுயேட்சை சின்னங்களில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சி ஆட்சிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இம்ரான்கான் கட்சி தான் பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஆட்சி அமைக்க 133 இடங்கள் தேவை என்ற நிலையில் இம்ரான்கான் கட்சி சார்பில் சுயேட்சையாக களம் இறங்கிய வேட்பாளர்கள் 110 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றனர். ஒரு வேட்பாளர் கொல்லப்பட்டதால் தேர்தல் நடந்த 264 தொகுதிகளில் 201 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் இம்ரான்கான் சார்பில் சுயேட்சையாக போட்டியிட்ட 86 பேர் வெற்றி பெற்றனர்.

நவாஸ் ஷெரீப் கட்சி 59 இடங்களிலும், பிலாவல் பூட்டோ தலைமையிலான கட்சி வேட்பாளர்கள் 44 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதற்கிடையே தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டு வருவதால் பாகிஸ்தான் முழுவதும் பதற்றம் உருவாகி உள்ளது. இம்ரான்கான் கட்சி சார்பில் சுயேட்சையாக களம் இறங்கிய வேட்பாளர்கள் பலர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதும் இம்ரான்கட்சி ஆதரவாளர்கள் 150 தொகுதிக்கு மேல் முன்னிலையில் இருந்தனர்.

ஆனால் நள்ளிரவில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் காவலில் வைக்கப்பட்டனர். முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. குறிப்பாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தொகுதி தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டார். ஆனாலும் மன்செஹ்ரா தொகுதியில் இம்ரான் வேட்பாளர் ஷாஜதா கஸ்டசாப்பிடம் நவாஸ்ஷெரிப் தோல்வி அடைந்தார். பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி லாகூர் தொகுதியில் நவாஸ் கட்சி வேட்பாளர் அட்டா தரரிடம் தோற்றார். பிலாவல் 15,000 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

* தேர்தல் முடிவுகள் திருத்தப்பட்டனவா?
இம்ரான்கான் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பாகிஸ்தானில் மொத்தம் உள்ள 265 இடங்களில் 150 இடங்களை அந்த கட்சி வென்றதாக குறிப்பிட்டு வேட்பாளர்களுக்கு வழங்கிய வெற்றி படிவம் 45 வெளியிட்டது. அதன்பின் வெளியிட்ட இன்னொரு பதிவில் பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் திருத்தப்படுகின்றன. இது முற்றிலும் அவமானம். தேசத்தின் ஆணையை திருடுவது வெட்கக்கேடானது. தவறான முடிவுகளை பாகிஸ்தான் மக்கள் கடுமையாக நிராகரிக்கின்றனர். உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது.

வாக்குச் சாவடி முகவர்கள் கடத்தப்பட்டு, போலியான படிவம் 45ல் கையொப்பமிட வற்புறுத்தப்படுகிறார்கள். இம்ரான்கான் பரிந்துரைத்த வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பின்னர், இப்போது பல்வேறு தொகுதிகளில் திடீரென தோல்வியடைந்துள்ளனர். சக்திவாய்ந்த ராணுவத்தின் ஆதரவுடன் வெற்றிபெற விரும்பும் நவாஸ் ஷெரீப் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். பாகிஸ்தான் மக்கள் உங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜனநாயகக் கட்சியினராக ஓரளவு நம்பகத்தன்மையை மீண்டும் பெற இது ஒரு பொன்னான வாய்ப்பு.

பகல் கொள்ளை பாகிஸ்தான் மக்களால் நிராகரிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் நவாஸ் ஷெரீப் கட்சி சார்பில், 2024 பொதுத் தேர்தல்களின் இறுதி முடிவுகளைப் பெற்ற பிறகு நவாஸ் ஷெரீப் வெற்றி உரையை நிகழ்த்துவார் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இம்ரான் ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் தேர்தல் முடிவுகளை அறிவதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

* நவாஸ் குடும்பம் வெற்றி
பாகிஸ்தான் தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சி சார்பில் களம் இறங்கிய நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாஸ், நவாஸ் ஷெரீப் தம்பி ஷெபாஸ் ஷெரீப், மகன் ஹம்சா ஷெபாஸ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் லாகூர் தொகுதிகளில் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் நவாஸ் இன்னொரு தொகுதியில் தோல்வி அடைந்தார்.

இம்ரான்கட்சியின் மூத்த தலைவர் கோஹர் அலிகான் சுயேட்சையாக கைபர்-பக்துன்க்வா மாகாணத்தின் புனர் தொகுதியில் வெற்றி பெற்றார். இம்ரான் கட்சியின் சார்பில் முன்னாள் சபாநாயகராக இருந்த அசாத் சைர் வெற்றி பெற்றார். இம்ரான் ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த பெர்வைஸ் கட்டக் தோல்வி அடைந்தார்.

* 4 மாகாண தேர்தல் ரிசல்ட்
சிந்து மாகாணத்திற்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 53 இடங்களில் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 45 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேட்சைகள் 4 இடங்களில் வென்றனர். ஜனநாயக கூட்டணி 2 இடங்களிலும், ஜமாத் இ இஸ்லாம், முட்டாகிடா குவாமி இயக்கம் ஆகியவை தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன.

கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 50 தொகுதிகளில் இம்ரான் கட்சி சார்பில் சுயேட்சையாக களம் இறங்கிய வேட்பாளர்கள் 45 இடங்களில் வெற்றி பெற்றனர். பஞ்சாப் மாகாண தேர்தலில் நவாஸ் கட்சி 39 இடங்களிலும், இம்ரான் கட்சி சுயேட்சைகள் 33 இடங்களிலும், முஸ்லிம் லீக் 2 இடங்களிலும் வென்றது. பலுசிஸ்தான் மாகாணத்திலும் நவாஸ் கட்சி வெற்றி பெற்றது.

The post பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் வெற்றி: சுயேட்சையாக போட்டியிட்டு அபாரம், நவாஸ், பிலாவல் பூட்டோ படுதோல்வி appeared first on Dinakaran.

Tags : Imran Khan ,Pakistan ,Abaram ,Nawaz ,Bilawal Bhutto ,Islamabad ,parliamentary ,Nawaz Sharif ,Parliament of Pakistan ,Dinakaran ,
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு